தஞ்சாவூர்: கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையும், தொன்மையும் வாய்ந்த இத்தலத்தில் திருமழிசையாழ்வாருக்கு பெருமாள் நேரில் காட்சி தந்துள்ளார். அவரது வேண்டுகோளின்படி உத்தானசாயி (சயனத்தில் இருந்து சற்று எழுந்திருக்கும் நிலை) கோலத்தில் சாரங்கபாணி சுவாமி எனும் ஆராவமுதன் இங்கு அருள்பாலிக்கிறார்.
பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேராக தேருடன் இத்தலத்திற்கு எழுந்தருளி மணம் புரிந்ததாக கூறுகிறது, ஸ்தல வரலாறு. பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேரடியாக தன்னுடைய ரதத்திலேயே இங்கு வந்ததால், இங்கு கர்ப்பகிரகம் யானை, குதிரை பூட்டிய ரதத்துடன் கூடியதாக அமைந்துள்ளது. இது பூலோக வைகுண்டம் என போற்றப்படுகிறது. எனவே, இங்கு சொர்க்கவாசல் என்ற ஒன்று தனியாக இல்லை.
108 திவ்ய தேசங்களில் திருவரங்கம் திருப்பதிக்கு அடுத்து சிறப்பு வாய்ந்த வைணவ ஸ்தலமாக சாரங்கபாணி கோயில் போற்றப்படுகிறது. நாலாயிர திவ்ய பிரபந்தம் எனும் தமிழ்ப் பாடல்கள் தந்த பெருமைமிகு தலமாக விளங்குகிறது. இக்கோயிலின் ராஜ கோபுரம் 171 அடி உயரம் கொண்டது.
இத்தகைய பெருமை பெற்ற சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா பத்து நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். அதுபோல, இந்த ஆண்டு இவ்விழா, இன்று காலை சாரங்கபாணி சுவாமி ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருள, நாதஸ்வரம் மேள, தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, பட்டாட்ச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கருடாழ்வார் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, கொடி மரத்தில் ஏற்றி வைக்கப்பட்டு, கொடி மரத்திற்கும், சுவாமிகளுக்கும் நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டது.