தஞ்சாவூர்:கும்பகோணத்தில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில், புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் துவங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் கோயில் மற்றும் வீடுகளில் கொலு வைத்து தினமும் பொதுமக்கள் பூஜை வழிபாடு செய்வார்கள்.
கும்பகோணம் மாவட்டம், சத்திரம்கருப்பூர் கிராமத்தில் மூன்று தலைமுறையாக நவராத்திரி கொலு பொம்மைகள் தயார் செய்யும் தொழிலில் ரமேஷ்குமார் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். மண் பொம்மைகள் மற்றும் காகிதக்கூழ் பொம்மைகள் என இரு வகை பொம்மைகள் தயார் செய்த நிலையில், இலகுவாகவும், அதிகம் சேதமடையாமலும், நீண்ட நாட்களுக்குப் பயன்படும் காகிதக்கூழ் பொம்மைகளையே அதிகளவில் விரும்புவதால், தற்போது அவற்றை அதிக அளவில் தயார் செய்து வருகின்றனர்.
பழைய காகிதங்களை கூழாக்கி அதிலிருந்து தயாராகும் பேப்பர் பவுடரை, கிழங்குமாவில் தயாரான பசையில் உரிய பதத்தில் கலந்து, உருவத்தின் அச்சினை பிளாஸ்டோ பாரீஸில் முன் மற்றும் பின் இரு பாகங்களாக உருவாக்கப்பட்ட டையில் வைத்து தனித்தனியாக தயார் செய்து காய வைதது, பின்னர் மீண்டும் பழைய பேப்பர் மற்றும் பசையைக் கொண்டு இரு பாகங்களையும் ஒன்றாக இணைத்து ஒட்டுகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, பல வண்ணத்தில் வர்ணங்களை தீட்டி, அழகுப்படுத்தி விற்பனைக்கு அனுப்புகின்றனர். இவர்களிடம் மிக சிறிய பொம்மைகள் ரூ.15 (காய்கறி வகைகள்) முதல் ரூ.20 ஆயிரம் (63 நாயன்மார்கள் செட் - 71 பொம்மைகள் கொண்டது) வரையில், அரை அடி முதல் 4 அடி உயரம் கொண்ட பொம்மைகள் தயார் செய்யப்படுகின்றன.