தஞ்சை: கும்பகோணம், சென்னை சாலையில் அமைந்துள்ள கொரநாட்டுக்கருப்பூரில், சோழ மன்னர்களின் ஆட்சியில் கிபி 1188 முதல் 1216 ஆண்டுகளில் அமைக்கப்பெற்ற அழகிய கற்கோயிலே சுந்தரேஸ்வரசுவாமி திருக்கோயில் ஆகும். இக்கோயிலின் தல விருட்சம், பாதிரி மரம்.
ஒரு சமயத்தில் கும்பகோணம் பகுதியில் பௌண்டரீக யாகம் செய்தபோது அதில் இருந்து அமுதத்துளிகள், பத்து மைல் தொலைவில் உள்ள 5 இடங்களில் விழுந்துள்ளது. அவை தாராசுரம், திருநாகேஸ்வரம், திருவிடைமருதூர், சுவாமிமலை மற்றும் கொரநாட்டுகருப்பூர் ஆகிய இடங்கள் ஆகும். எனவே, இவை பஞ்ச குரோசத்தலங்கள் என போற்றப்படுகிறது.
இத்தகைய சிறப்புபெற்ற தலத்தில் பிரம்மன், இந்திரன், குபேரன் உள்ளிட்ட தேவர்களும், அகத்தியர், சுரதன் உள்ளிட்ட முனிவர்களும் வழிப்பட்டுத் தங்களின் சாப விமோசனம் பெற்றுள்ளனர். இங்குள்ள தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் எனப் போற்றப்படுகிறது. இதில் நீராடினால் பல யாகங்கள் செய்த பலன்கள் உண்டு என்பது ஐதீகம்.
இதற்கிடையில் இக்கொரநாட்டுக்கருப்பூரில் உள்ள காவிரியாற்றில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு மரப்பெட்டி மிதந்து வந்துள்ளது. அதனை அவ்வூர் மக்கள் திறந்து பார்த்த போது அதில் படுத்த நிலையில் உக்கிரமான வடிவில் 2 கோரைபற்கள், அஷ்ட புஜங்களுடனான காளி தேவியின் மார்பளவு மரச்சிலை இருந்துள்ளது வலது புஜத்தில் சூலம், அரிவாள், உடுக்கை, கிளி ஆகியவையும், இடது புஜத்தில் பாசம், கேடயம், மணி, கபாலமும் கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் அங்குள்ள சிறுமியின் அருள்வாக்கு வாயிலாக அதனை வைத்து பூஜிப்பதற்கான வழிமுறைகள் தெரிய வந்துள்ளன. அதன்பிறகு மறைந்த காஞ்சி மகா பெரியவர் சந்திரசேகரந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளாசிப்படி இக்காளியை சுந்தரமாகாளி எனப்பெயர் சூட்டி தனிப்பெட்டியில் வைத்து சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோயில் தனி சந்நிதியில் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். அன்று முதல் இக்காளி சுந்தரமாகாளி என்றும் பெட்டிக்காளி என்றும் பக்தியோடு போற்றப்படுகிறாள்.
இக்காளிக்குரிய வழிப்பாட்டு முறைகள் விநோதமானதுஅதாவது, முகச்சவரம் செய்தவர்கள், எண்ணெய் தேய்த்து குளித்தவர்கள், கர்ப்பிணிகள் இக்காளியை வணங்கக்கூடாது. மேலும் அன்றாட பூஜைகள் யாவும் காளி உள்ள பெட்டியைத் திறக்காமலேயே நடைபெறுகிறது. இப்பெட்டியை திறக்க பெட்டிக்காளிக்கு விசேஷ சர்க்கரை பொங்கல், தயிர் சாதம் கொண்ட பள்ளயம் இட்ட பிறகே திறக்க வேண்டும் என்பதால் விசேஷ நாட்கள், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ராகுகால நேரத்தில் மட்டும் திறக்கப்படுகிறது.