தஞ்சை: அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் முருகானந்தம் - கனிமொழி தம்பதியர். இவர்களுடைய மகள் லாவண்யா (17). கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் கனிமொழி உயிரிழந்த நிலையில், சரண்யா என்பவரை முருகானந்தம் இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் லாவண்யா தஞ்சையின் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி பன்னிரெண்டாம் வகுப்புப் படித்துவந்தார். இதற்கிடையில் கடந்த மாதம் லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
கட்டாய மதமாற்றம்
பள்ளி நிர்வாகம், விடுதிக் காப்பாளர்கள் உள்ளிட்டோர் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதன் காரணமாகவே தற்கொலை முடிவை எடுத்ததாக லாவண்யாவே வாக்குமூலம் ஒன்றை அளித்திருந்தார். இந்தக் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், பள்ளி விடுதி காப்பாளர் தன்னை அதிக வேலை வாங்குவதால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் குறைவான மதிப்பெண் எடுத்ததால், சரியாக படிக்க முடியாது என நினைத்தே விஷம் குடித்ததாகவும் மாணவி லாவண்யா கூறும் மற்றொரு காணொலி வெளியானது. மதமாற்றம் குறித்து மாவட்ட கல்வி அலுவலரும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல்செய்தார்.
இது தொடர்பாக நீதிமன்றம் விசாரிப்பதற்கு முன்னதாகவே, கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த விவகாரத்தில் மதமாற்றம் ஏதும் நடைபெறவில்லை என முன்முடிவுக்கு வந்தது சந்தேகத்தை வலுப்படுத்தியது.
இதற்கிடையில், தனது மகளின் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மாணவியின் தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மாணவி லாவண்யாவின் மரண வழக்கை கடந்த 31ஆம் தேதி சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.