டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து 8ஆவது ஆண்டாக குறுவை சாகுபடி பொய்த்துப்போனதை நினைவுபடுத்தும் வகையில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அதன் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, ‘காவிரி மேலாண்மைக்கு நிரந்தரத் தலைவர் அமைக்க வேண்டும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தீர்ப்பை மதித்து தண்ணீரைத் திறந்துவிடு கர்நாடக அரசே’ என கோஷமிட்டனர்.
பொய்த்துப்போன குறுவை சாகுபடி: 8ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி! - farmers
தஞ்சாவூர்: தொடர்ந்து 8ஆம் ஆண்டாக குறுவை சாகுபடி பொய்த்துப்போனதால், கடைமடை விவசாயிகள் ஆற்றின் நீரொழுங்கி பலகைக்கு முன் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் தனபாலன், ”தமிழ்நாட்டுக்கே உணவளிக்கக்கூடிய டெல்டா மாவட்டத்தில் தொடர்ந்து 8 ஆண்டுகளாக குறுவை சாகுடி இல்லாமல் போன நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை உத்தரவிட்டும் கர்நாடக அரசு தண்ணீர் திறக்கவில்லை. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதனால் லட்சக்கணக்கான விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் எல்லாம் கூலித் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.
மேலும் அவர், மத்திய அரசாங்கம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதித்து கர்நாடக அரசுக்கு தண்ணீர் திறந்துவிட அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழக அரசாங்கம் வாய்க்கால்கள் அனைத்தையும் தூர்வாரி புனரமைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.