தஞ்சாவூர்: காவிரி பிரச்னையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீரை தர மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரியில் நீர் திறந்து விட மத்திய அரசு கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரியும், காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று (அக்.11) கடை அடைப்பு போராட்டம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும் காவிரி படுகைப் பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஏரளாமான பெண்கள் உள்பட திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி விவசாய சங்கம், வணிக சங்க நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் மாவட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் கீர்த்திவாசன் தலைமையிலான போலீசார் கைது செய்து உடனடியாக அப்புறப்படுத்தினர்.