தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மிகவும் பழமையான மருத்துவமனையாகும். இங்கு தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் இங்கு வந்து பல்வேறு சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தேசிய மருத்துவர்கள் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த முகாமில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் 100 பேர் கலந்து கொண்டு, மொத்தம் 100 யூனிட் ரத்த தானம் வழங்கினர்.
இது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் கூறும்போது, “உயிர் காக்கும் முக்கிய காரணிகளில் ரத்தம் மிகவும் அவசியம். ஒருவர் ரத்ததானம் செய்வதால் மூன்று உயிர்கள் காப்பாற்றப்படும். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சராசரி தேவையாக 50 முதல் 60 யூனிட் வரை ரத்தம் தேவைப்படுகிறது.
மேலும் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் தினசரி 30 முதல் 40 வரை மகப்பேறு பிரசவம் மற்றும் 25 மகப்பேறு அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. அது மட்டுமல்லாமல், ரத்தப்போக்கு அதிகமாக உள்ள கர்ப்பிணி தாய்மார்களை காப்பாற்ற தினசரி 40 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது.