தஞ்சாவூர்: நாட்டிலுள்ள அனைத்து மக்களும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து முழுமையாக தெரிந்துகொள்வதற்கும், அத்திட்டங்கள் மூலம் பயன்பெறுவதற்கும் 'உத்திரவாதம்' என்னும் தலைப்பிலான விளம்பர வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 'விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதில் மத்திய அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைக்கும் வகையில், நாடு முழுவதுமுள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் விளம்பர வாகனம் சென்று நலத்திட்டங்கள் குறித்து விளக்கி வருகிறது. மத்திய அரசு திட்டங்களின் விவரங்களை விளக்குவதுடன், அங்கேயே அதற்காக விண்ணப்பிக்கும் வசதியையும் ஏற்படுத்தி தருகிறது.
நவம்பர் மாதம் தொடங்கிய இந்த விளம்பர வாகன சுற்றுப்பயணம், ஜனவரி மாத இறுதி வரை பல்வேறு கிராமப்புறங்களுக்குச் சென்று மக்கள் பயன்பெறும் வகையில் வழிவகை செய்யப்படுகிறது. இந்நிலையில், இன்று(டிச.27) இந்த வாகனம் கும்பகோணம் அருகேயுள்ள வளையப்பேட்டை அக்ரஹாரம் பகுதிக்குச் சென்றது.
அப்போது பிரதமர் மோடி, பொதுமக்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடினார். மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு எந்த வகையில் பயனளித்துள்ளது என்பது குறித்து பிரதமர் மோடி பொதுமக்களிடம் நேரடியாக கேட்டறிந்தார்.
இதற்கிடையே, நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் 'என் மண், என் மக்கள்' நடைபயணத்திற்காக, கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கியிருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வளையப்பேட்டை கிராம மக்களுடன் சேர்ந்து மோடியின் கலந்துரையாடல் நிகழ்வினை பிரச்சார வாகன தொலைக்காட்சி வாயிலாகப் பார்த்தார்.
தொடர்ந்து பிரதமரின் கலந்துரையாடலுக்குப் பின்னர், அங்கு கூடியிருந்த மக்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், "அரசின் நலத்திட்டங்கள் எல்லாம், எல்லா மக்களுக்கும் இன்றளவும் முழுமையாகச் சென்று சேரவில்லை. 10 முதல் 15 சதவீதம் வரையிலான அடித்தட்டு மக்கள், இன்றளவும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தெரியாதவர்களாகவும், அறியாதவர்களாகவுமே உள்ளனர்" என்று தெரிவித்தார்.
இப்படி அண்ணாமலை சீரியஸாக பேசிக் கொண்டிருந்த நிலையில், நிகழ்ச்சியில் பல இருக்கைகள் காலியாகின. கட்சி நிர்வாகிகள் பலர், அதனை கண்டுகொள்ளாமல் செல்போனை பாரத்துக் கொண்டே இருந்தனர். அங்கு நிகழ்ச்சியைக் காண வந்த பொதுமக்கள் பலரும், அவர் பேசுவதை விட்டுவிட்டு அவருடன் செல்பி எடுக்கவும், அவரை அவர்களது அலைபேசியில் காட்சி பதிவு செய்வதிலுமே அக்கறை காட்டினர்.
தொடர்ந்து, விசேஷ கருடா டிரோன் வாயிலாக இயற்கை வேளாண்மையில் கூடுதல் பரப்பிற்கு குறைந்த அளவிலான ரசாயனக் கலப்பில்லா பூச்சி மருந்து தெளிக்கும் தொழில்நுட்பத்தின் நேரடி காட்சிகளையும் கிராம மக்களுடன் நேரடியாகப் பார்த்து பாராட்டினார் என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க:தமிழக அரசின் மெத்தனப்போக்கே அமோனியா கசிவுக்கு காரணம் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு