தஞ்சாவூர்:அண்ணல் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சை அருகே உள்ள மறியல் பகுதியில், அம்பேத்கரின் உருவப்படத்துக்கு திராவிடர் கழகத்தலைவர் வீரமணி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாட்டில் இன்னும் சமத்துவம் நிலவவில்லை. அரசியல் சுதந்திரம் கிடைத்து சமூகத்தில் புரட்சிகள் வரவில்லையெனில் அந்த அரசியல் சுதந்திரம் பயனற்றது என அண்ணல் அம்பேத்கர் கூறினார். அதைத்தான் இன்று நடைமுறையில் பார்க்கிறோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற சட்டம் தீண்டாமை ஒழிப்பை மையப்படுத்தியது, சாதியை மையப்படுத்தியது என்று சொன்னாலும், இன்னும் அதற்கு முட்டுக்கட்டைகள் பல இடங்களில் இருந்து கிளம்பக்கூடிய அளவிற்கு பிற்போக்குவாதிகள் பல இடங்களில் அமர்ந்திருக்கிறார்கள். அது வெவ்வேறு இடங்களாக இருக்கிறது.
அனைவரும் சமமானவர்களே; அனைவரும் உறவினர்களே என்று உறுதியாக எடுத்துக்கொண்டு மனித நேயத்தை நோக்கி நம்முடைய சமுதாயத்தை நடத்த வேண்டும். அதற்கு கட்சி, சாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.