தஞ்சை: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு சாதனைகள் குறித்துபாஜகவின் எஸ்சி/எஸ்டி பிரிவு மாநிலத் தலைவர் தடா பெரியசாமி, கிராமந்தோறும் பரப்புரை செய்து வருகிறார். அதன் ஒருபகுதியாக, நேற்று (ஜூன் 5) கும்பகோணம் அருகே நாச்சியார்கோயிலில் அமைந்துள்ள உத்திராதி மடத்திற்கும், 108 வைணவத் தலங்களில் ஒன்றானதும், பிரசித்தி பெற்ற கல்கருட தலமான வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசபெருமாள் கோயிலுக்கும் சென்றிருந்தார்.
அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையைப் போல, சிறந்த அரசியல்வாதியை, அறிவாளியை எனது 40 ஆண்டு கால அரசியல் வாழ்வில் கண்டதில்லை. அண்ணாமலை தலைமை ஏற்ற பிறகு, தமிழ்நாட்டில் பாஜக அசூர வளர்ச்சியைக் கண்டுள்ளது. தமிழ்நாட்டை ஆளும் நிலைக்கு பாஜக வரும்; அதனை யாராலும் தடுக்க முடியாது. அத்துடன் சசிகலாவை பாஜகவில் சேர்ப்பது குறித்து கட்சியின் மேல் இடமே முடிவு செய்யும்' என்றார்.
மேலும் அவர், 'தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், அவர்கள் அளித்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை ஒழுங்காக நிறைவேற்றவில்லை. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஓர் கையாலாகாத அரசு; முதுகெலும்பு இல்லாத அரசு' என்றும் குற்றம்சாட்டினார்.