தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள, பாபநாசம் கீழவீதியில், நேற்று (ஜூன் 23) இரவு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் பேசிய வானதி சீனிவாசன், “தமிழகத்தில் இன்று ஒவ்வொரு துறையிலும், லஞ்சமும், ஊழலும் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. எங்களுக்கு வாக்களிக்காதவர்கள் ஏன் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என வருத்தப்படுவார்கள் என தமிழக முதல்வர் சொல்லிக் கொண்டுள்ளார்.
ஆனால் உண்மையில் அவர்களுக்கு, வாக்களித்தவர்கள் எல்லாம் இப்போது ஏன் வாக்களித்தோம் என்று எண்ணும் அளவுக்கு தான் திமுக தலைமையிலான தமிழக அரசு நடந்து வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், நீட் தேர்வை ரத்து செய்வோம் என தேர்தல் வாக்குறுதி அளித்தார்கள்.
இப்போதும் நீட் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது ஒரு சில இடங்களில் தவறாக வழிநடத்தக் கூடிய மாணவர்கள் உயிரிழப்பது துரதிஷ்டவசமானது. நீட் தேர்வு திமுகவிற்கு ஒரு அரசியல் அஸ்திரம். இப்போது நீட் தேர்வு பற்றி திமுக வாய் திறப்பதில்லை. நீட் தேர்வால் உயிரிழந்த மாணவரின் வீட்டிற்கு இப்போது உதயநிதி ஸ்டாலினை செல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்” எனத் தெரிவித்தார்.