தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கும்பகோணம் கொழுந்து வெற்றிலை விவசாயிகளின் பரிதாபம்! - betel leaves formers story

தஞ்சாவூர்: 'கும்பகோணம் வெற்றிலை' எனப் பிரபலமாகப் பேசப்படும் வெற்றிலை விவசாயிகளின் பரிதாப நிலையைப் பற்றி, இக்கட்டுரையில் பார்ப்போம்.

வெற்றிலை விவசாயிகளின் பரிதாபம்
வெற்றிலை விவசாயிகளின் பரிதாபம்

By

Published : Aug 10, 2020, 9:08 PM IST

Updated : Aug 11, 2020, 10:03 AM IST

வெற்றிலை சுப நிகழ்ச்சிகளில் முக்கிய இடம் வகிக்கிறது. மேலும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு.

இப்படிப்பட்ட வெற்றிலை சாகுபடியானது தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள அய்யம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை, சுவாமி மலை, ஆவூர், திருவையாறு உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட கிராமங்களில் அக்டோபர் மாதம் செய்யப்படுகிறது.

முதலில் விவசாயிகள் நிலத்தை தயார்படுத்தி அகத்திக்கீரை, செம்பங்கீரை, முருங்கை கீரை ஆகிய குச்சிகளை நடுகின்றனர். அந்த கீரைக் குச்சிகள் 3 அடி வளர்ந்தவுடன் அதில் வெற்றிலைக் கொடியை படரவிடுகின்றனர். குறிப்பாக மிதமான தட்பவெப்பம், மண்வளம், தண்ணீர் வசதி உள்ள பகுதிகளில் வெற்றிலை பயிரிடப்படுகிறது.

வெற்றிலை விவசாயிகளின் பரிதாபம்

இப்படி பார்த்துப் பார்த்து படரவிடப்படுகின்ற வெற்றிலையின் சாகுபடி, மார்ச் மாதம் முதல் பறிக்கப்படுகிறது. இப்படி கிள்ளி பறிக்கப்படுகின்ற வெற்றிலையில் தான் ஒரு ரகசியம் அடங்கியுள்ளது. அந்த ரகசியம் என்ன? இதுகுறித்து விவசாயிடம் கேட்டபொழுது, "எல்லா ஊர்களிலும் சுமார் 20இல் இருந்து 25 நாட்களுக்கு ஒருமுறை தான் வெற்றிலை கிள்ளி பிடுங்குவார்கள். ஆனால், கும்பகோணத்தைச் சுற்றியுள்ள விவசாயிகள் 12இல் இருந்து 15 நாட்களுக்குள் உள்ள இளம் வெற்றிலையைப் பறிப்பதால் 'கும்பகோணம் கொழுந்து வெற்றிலை' என உலகம் முழுவதும் அழைக்கப்படுகிறது" என்றார்.

கரும்பச்சை நிறத்தில் இருப்பதை ஆண் வெற்றிலை என்றும், இளம்பச்சை நிறத்தில் இருப்பதை பெண் வெற்றிலை என்றும் வகைப்படுத்துகிறோம். வெற்றிலையில் வெள்ளைக்கொடி, கற்பூரம், பச்சைக்கொடி ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இந்த வெற்றிலைக் கொடியின் காலம் இரண்டரை ஆண்டுகள் ஆகும்.

பொதுவாக வெற்றிலைச் சாகுபடியின்போது, நாள் ஒன்றுக்கு ஏக்கருக்கு சுமார் 2,000 முதல் 2,500 வெற்றிலைகள் கிள்ளிய நிலையிலிருந்து, தற்போது பூச்சித் தாக்குதலால் 200 முதல் 250 வரை மட்டுமே வெற்றிலை கிள்ளுதல் நடைபெறுகிறது.

இந்நிலையில் வெற்றிலைச் சாகுபடியில் பூச்சித் தாக்குதல், பொருளாதார சூழ்நிலை, இடைத்தரகர்கள் பிரச்னை உள்ளிட்டவற்றால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை லாபம் எடுத்து வந்த விவசாயிகள் தற்போது போட்ட முதலீட்டைக் கூட எடுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர். மேலும் செவட்டை, சுருட்டை, கருஞ்சுருட்டை, சப்பாத்தி பூச்சி என புதிய நோய்களால் வெற்றிலை விவசாயிகள், அதனைப் பயிரிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கூறும்போது, "வெற்றிலையைக் கிள்ளி ஏல கடைக்கு எடுத்துச் செல்வோம். அங்கு ஏலம் விடப்படும் இடைத்தரகர்கள் கொள்முதல் செய்வார்கள். வேலையாட்கள் கூலி போக விவசாயிகளுக்கு கையைப் பிடிக்கும் சூழல்தான் உருவாகிக்கொண்டிருக்கிறது.

வெற்றிலை சாகுபடி விவசாயிகளின் நலன் கருதி, வெற்றிலை கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும். அழுகும் பொருள் என்றும் பாராமல் அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். பயிர்க் காப்பீடு போல் வெற்றிலை விவசாயிகளுக்கு வெற்றிலை காப்பீடு அரசு வழங்க வேண்டும்" என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: கரோனாவால் கருகும் வெற்றிலை விவசாயம்!

Last Updated : Aug 11, 2020, 10:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details