நீண்ட நாட்களாக கிடைக்காத செவித்திறன் சான்றிதழ் கிடைத்ததால் மகிழ்ச்சியில் திளைத்த மாணவர்கள்! தஞ்சாவூர்:தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அரசு சார்பிலும், திமுக கட்சியின் பல்வேறு அணிகள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், தஞ்சாவூர் மேம்பாலம் பகுதியில் செவித்திறன் குறைபாடு உள்ளவருக்காக இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் பயிலக்கூடிய செவித்திறன் குறைபாடு உள்ள பள்ளி மாணவர்களுக்குத் தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளரும், துணை மேயருமான டாக்டர் அஞ்சுகம் பூபதி தலைமையில் மருத்துவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பல்வேறு மருத்துவப் பரிசோதனை செய்து, அவர்களுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.
அப்போது, பள்ளி மாணவர்கள் தங்களது உடல் நலக்குறைபாட்டை மருத்துவர்களிடம் சைகை மொழியில் தெரிவித்தனர். இதனைப் பள்ளி ஆசிரியர்கள் புரிந்து கொண்டு மருத்துவர்களுக்கு விளக்கம் அளித்தனர். அதன் அடிப்படையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்து மருந்துகளை வழங்கினர்.
மேலும் பள்ளியில் பயிலும் 130 மாணவ, மாணவியர்களுக்கு அரசு மருத்துவர்கள் மூலம் ’’ஆடியோகிராம் டெஸ்ட்(செவித்திறன் சோதனை)’’ செய்யப்பட்டு அவர்களுக்கு உரியச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தச் சான்றிதழ் மூலம் ’’மாணவர்கள் மற்றும் அவருடன் செல்பவர்கள் பேருந்து மற்றும் ரயிலில் இலவசமாகச் செல்ல வாய்ப்பு’’ ஏற்பட்டுள்ளது.
இந்த ஆடியோகிராம் டெஸ்ட் சான்றிதழ் பள்ளி மாணவர்களுக்கு நீண்ட காலமாகக் கிடைக்காமல் இருந்த நிலையில் இந்த மருத்துவ முகாம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு தற்போது ஆடியோகிராம் டெஸ்ட் சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுடன் பயணிப்பவர்களின் செலவும் குறைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மருத்துவர்கள் மோகன்ராஜ், ராஜ் மோகன், வசந்தகுமார், விக்னேஷ் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ராமேஸ்வரம் - மண்டபம் மீனவர்கள் 9 பேர் விடுதலை: 2 நாட்களில் தாயகம் திரும்பும் தமிழக மீனவர்கள்!