உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடைபெற்று வரும் ஆஷாட நவராத்திரி விழாவில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் மஞ்சள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் கோயில் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்தக் கோயிலில் உள்ள தனி சந்நிதியில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் அருள்பாலித்து வருகிறார்.
இந்த நிலையில், மஹா வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாறு கொண்டாடப்பட்டு வரும் இந்த ஆஷாட நவராத்திரி விழா, தஞ்சை பெரிய கோயிலில் உள்ள ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும் என்பதும், வேறு எங்கும் நடைபெறுவது இல்லை என்பதும் தனித்துவம் வாய்ந்த ஒன்று.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி 21ஆம் ஆண்டு பெருவிழா, தஞ்சை பெரிய கோயிலில் நேற்றைய முன்தினம் (ஜூன் 18) ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், ஸ்ரீ மஹா கணபதி அபிஷேகம் மற்றும் ஸ்ரீ மஹா வாராஹி அபிஷேகம் ஆகியவற்றுடன் தொடங்கியது.
10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம், மஞ்சள் அலங்காரம், குங்கும அலங்காரம், சந்தன அலங்காரம், தேங்காய்ப் பூ அலங்காரம், மாதுளை அலங்காரம், நவதானிய அலங்காரம், வெண்ணெய் அலங்காரம், கனி வகை அலங்காரம், காய்கறி அலங்காரம் மற்றும் புஷ்ப அலங்காரம் என தினமும் அபிஷேகமும் பல்வேறு அலங்காரங்களும் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனையும் நடைபெறும்.
அதனைத்தொடர்ந்து அம்மன் திருவீதி உலா மற்றும் பூச்சொரிதலும் நடைபெறும். மேலும், மாலையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நந்தி மண்டபத்தில் நடைபெறும். அதேநேரம், ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிவித்துக் கொள்வர்.
அதேபோல் விழாவின் முதல் நாள் அன்று, சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க, ஹோமம் வளர்த்து அபிஷேகம் நடைபெற்று, பின்னர் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சுமார் 100 கிலோ எடை கொண்ட இனிப்பு வகைகளான ஜிலேபி, லட்டு, குலோப் ஜாமுன், மைசூர்பாகு மற்றும் பால்கோவா ஆகியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து இரண்டாம் நாள் விழாவில் (ஜூன் 19) ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு மஞ்சள் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. மேலும், மத்திய அரசின் தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் மற்றும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் நந்தி மண்டபத்தில் இரண்டாம் நாளாக பெங்களூர் ஸ்ரீ ஹரிஷ் சிவராமன் கிருஷ்ணன் குழுவினரின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க:தேய்பிறை அஷ்டமி; தருமபுரி தட்சிணகாசி காலபைரவர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு