சேலம் மாவட்டம், கெங்கவல்லி பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகரன். ரியல் எஸ்டேட் அதிபரான இவா் தனது வீட்டில் பஞ்சலோக சிலை ஒன்றை பதுக்கி வைத்திருப்பதாகச் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, ராஜசேகரின் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு ஒன்றே முக்கால் அடி உயரமும், ஆறரை கிலோ எடையும் கொண்ட பஞ்சலோக அம்மன் சிலை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதுதொடா்பாக ராஜசேகரை கைது செய்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், சிலையையும் பறிமுதல் செய்தனா். விசாரணையில், அந்தச் சிலை 13ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சோழா் காலத்து சிலை என்பதும், ராஜசேகா் அந்த சிலையை வெளிநாட்டில் விற்க முயன்றதும் தெரியவந்தது.