தஞ்சாவூர்:கும்பகோணம் அருகேவுள்ள உடையாரில், தற்போது மாமன்னர் ராஜராஜசோழனின் சமாதி பள்ளிப்படை கோயில் என நம்பப்படும் ஓடைத்தோப்பில் உள்ள சிவலிங்கம் அமைந்துள்ள இடத்தில் இல்லை என்றும்; அது வெறும் பாணலிங்கம் மட்டுமே என்றும்; பால்குளத்தியம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டின்படி, அது அதே உடையாரில் உள்ள கைலாசநாதர் கோயிலில் தான் உள்ளது என்றும் வரலாற்று ஆய்வாளர் முனைவர் பேராசிரியர் தெய்வநாயகம் கூறியுள்ளார்.
மேலும், இதுகுறித்து முழுமையாக தமிழ்நாடு அரசு, மத்திய மற்றும் மாநில அரசின் தொல்லியல்துறை வாயிலாக அகழாய்வு செய்து உண்மையை உலகறியச் செய்ய வேண்டும் என அறுபது ஆண்டுகள் அனுபவம் கொண்ட வரலாற்று ஆய்வாளர் முனைவர் பேராசிரியர் கோ தெய்வநாயகம் செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி அண்ணா கலையரங்கில், இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலாவியல் துறையுடன் இணைந்து கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கம் சார்பில், சங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, சோழர்கள் ஒரு மீள் புரிதல்எனும் தலைப்பில் கருத்தரங்கு கல்லூரி முதல்வர் தனராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் க. அன்பழகன், வரலாற்று ஆய்வு சங்க கும்பகோணம் வட்டாரத்தலைவர் மரு. பால சிவகோவிந்தன், தேர்வு நெறியாளர் ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், அகழாய்வு வாயிலாக அறியப்படும் சோழர்களின் சோழர் வரலாறு எனும் தலைப்பில் மேனாள் தொல்லியல்துறை கண்காணிப்பாளர் வசந்தியும், சோழர்கள் ஒரு மீள் புரிதல் எனும் தலைப்பில் வரலாற்று ஆய்வாளரும், தஞ்சை தமிழ் சங்கத் தலைவருமான முனைவர் பேராசிரியர் கோ. தெய்வநாயகம் உரையாற்றினர்.