தஞ்சாவூர்:தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று (நவ.26). தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நடுக்காவேரி பகுதியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'என் மண் என் மக்கள்' நடைப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து அண்ணாமலை வடக்கு வீதி, மேலவீதி, தெற்கு வீதி வழியாக பாதயாத்திரை மேற்கொண்டு கீழ வீதி நிக்கல்சன் கூட்டுறவு வங்கி அருகே நிறைவு செய்தார்.
இதனையடுத்து அண்ணாமலை பேசியதாவது, "தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர். பாதயாத்திரையின் 113ஆவது தொகுதியாக தஞ்சாவூர் தொகுதியில் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. அதுவும் கார்த்திகை தீப திருநாளில் பாதயாத்திரை மேற்கொண்டது சிறப்பு வாய்ந்தது.
தமிழகத்தில் சாலை, பாலம் உள்பட எந்த பணியும் முறையாக நடைபெறவில்லை. மிக மோசமான அளவுக்கு தமிழகத்தை திமுக மாற்றி வைத்துள்ளது. தஞ்சாவூர் உள்பட 8 மாவட்டங்களில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நிலக்கரி எடுப்பதை மத்திய பாஜக அரசு ரத்து செய்துள்ளது.
நெல், கரும்புக்கான ஆதார விலையை திமுக அரசு உயர்த்தவில்லை. உலக வரலாற்றில் விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டம் போட்ட ஒரே அரசு திமுக அரசு தான் என்று குற்றம் சாட்டினார். தஞ்சாவூரின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு ஆயிரம் கோடிக்கு மேல் நிதி வழங்கி உள்ளது.