தஞ்சாவூர்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின், 'என் மண் என் மக்கள்' நடைபயணம் 68வது நாளில், நேற்று (டிச.25) பாபநாசம் சட்டமன்ற தொகுதி பசுபதிக்கோயில் இருந்து தொடங்கி, கும்பகோணம் புதிய பேருந்து நிலைய பகுதிக்கு வருகை தந்தார். அங்கு அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து நடைபயணத்தை நிறைவு செய்து, பிரச்சார வாகனத்தில் இருந்தபடி அண்ணாமலை தனது உரையை தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில், 'ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டு, சிறை செல்லும் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்களுக்காக, சென்னை புழல் சிறையில் 4 மாடிகள் கொண்ட தனி பிளாக் அமைத்திட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கிண்டலடிக்கும் வகையில் வேண்டுகோள் விடுத்தார்.
ஆண்டவனே முடிவு செய்தது போல, 1980ஆம் ஆண்டு முதல் இதுவரை கும்பகோணம் மகாமக விழாவின் போது, திமுக ஆட்சியில் இருந்தது இல்லை. அதுபோல, 2028 கும்பகோணம் மகாமகத்தின் போது திமுக ஆட்சியில் இருக்க போவதில்லை என்றும், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் குடும்ப கட்சிகள், ஊழல் கட்சிகளை ஒட்டுமொத்தமாக இந்த மண்ணை விட்டு அகற்ற கிடைக்கும் முக்கியமான தேர்தல் என்றும், இதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.