தஞ்சாவூர்:தமிழகத்தில் நாளுக்கு நாள் மணல் கொள்ளை அதிகரித்து வருவதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில்,பட்டுக்கோட்டை பண்ணவயல் ரோடு பகுதியில் நேற்று இரவு (மே 28) பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசாரான சரவணன் மற்றும் சதீஷ் இருவரும் இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்தப் பகுதியில் டாடா வாகனம் ஒன்று வந்ததைத் தொடர்ந்து, அதை ஆய்வு செய்ய போலீசார் முயன்றுள்ளனர்.
அப்போது, அந்த வாகனத்திலிருந்தவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக காவலர்களின் மீது மோதி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் போலீசார் சரவணன் மற்றும் சதீஷ் காயமடைந்த நிலையில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது அந்த வாகனத்தில் மணல் கடத்தப்பட்டு வந்ததும், அதை தடுத்து நிறுத்தியதால் போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் தெரிய வந்தது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், வாகனத்தின் உரிமையாளரான ராஜா என்பவரை கைது செய்து வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இருப்பினும் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் நிசாந்த் தலைமறைவானார். எனவே, போலீசார் அவரை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இருப்பினும், மணல் கடத்தி சென்ற வாகனத்தை தடுத்த நிறுத்த முயன்ற போலீசார் மீது வாகனத்தை மோதி தப்பி சென்ற சம்பவம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் இது முதல் முறை அன்று. தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மணல் கொள்ளையில் ஈடுபடுவோரைத் தடுக்கும் அதிகாரிகள் தாக்கப்படுகின்றனர். கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தலைத் தடுத்த வி.ஏ.ஓ மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி அவரை கொலை செய்து விட்டனர். அது தொடர்பான வழக்கும் நடைபெற்று வருகிறது.
மேலும், இதுபோல் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நரசிங்கபுரம் கிராமத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதைத் தடுத்த வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை மர்ம கும்ப கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த வருவாய் ஆய்வாளர், துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.