தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் திமுக ஏமாற்று வேலை செய்து வருகிறது” - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு! - magalir urimai scheme

தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் உரிமை தொகை என கூறிவிட்டு தற்போது அதில் நிபந்தனைகள் விதித்து, ஒருபகுதியினருக்கு மட்டும் வழங்கியுள்ள திமுகவின் ஏமாற்று வேலை வெட்ட வெளிச்சமாகியுள்ளது என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் ஹிட்லரை போன்று செயல்படுகிறார்”.. டிடிவி தினகரன் பேச்சு
டிடிவி தினகரன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2023, 6:42 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன்

தஞ்சாவூர்: குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை என அறிவித்து தற்போது நிபந்தனைகள் விதித்து, குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் வழங்கி திமுக மக்களை ஏமாற்றியதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கும்பகோணம் அருகேவுள்ள திம்மக்குடி தனியார் சொகுசு விடுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோடநாடு, கொலை மற்றும் கொள்ளை வழக்கில், காவல் துறையினர் உண்மை குற்றவாளிகளை தற்போது 70 விழுக்காடு நெருங்கி விட்டனர். இது குறித்த உண்மை வெளியாகும் தருணத்தில் இதில் யார் யாருக்கு தொடர்புள்ளது என தெரியவரும். இவ்வழக்கின் குற்றவாளிகளை சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு மக்களின் கோரிக்கை விரைவில் நிறைவேறும்” என்றார்.

மேலும், “சனாதனத்திற்கு மட்டுமல்ல அம்மாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவிற்கு, பணம், பதவியை தவிர வேறு எந்த நிலைப்பாடும் இல்லை. கட்சியின் சின்னமும், பெயரும் அவர்களிடம் உள்ளதால் அதை வைத்து தொண்டர்களையும், பணபலத்தை கொண்டு கட்சி நிர்வாகிகளையும் தங்கள் பக்கம் வைத்துள்ளனர். இவை அனைத்திற்கும் காலம் தான் மருந்து. எனவே கட்சியின் சின்னமும், பெயரும் விரைவில் மீட்கப்படும்.

திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் பெரும்பான்மையை நிறைவேற்றி விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என அண்ணா கூறினார். ஆனால், ஏழையின் அழுகையில் இறைவனை காணும் நிலை தான் தமிழ்நாட்டில் மக்கள் விரோத திமுக ஆட்சியில் உள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் ஹிட்லரை போன்று நடந்து கொண்டு வருகிறார். திமுக ஆட்சி மீதான குற்றச்சாட்டுகள் வெளியே வரக்கூடாது என்பதற்காக தற்போது தனது மகன் உதயநிதியை வைத்து சனாதனம் குறித்து பேச வைத்து பிரச்னையை திசை திருப்புகிறார். தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் உரிமை தொகை என அறிவித்து, தற்போது அதில் நிபந்தனைகள் விதித்து ஒருபகுதியினருக்கு மட்டும் வழங்கி திமுகவின் ஏமாற்று வேலை வெட்ட வெளிச்சமாகியுள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “மதவாதத்தை எதிர்க்கிறோம், பாஜகவை எதிர்கிறோம் என தமிழ்நாடு மக்களிடம் வாக்கு வாங்கிய பிறகு தற்போது நமது ஜீவாதாரமான காவிரி நீரைப் பெற, கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆளும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நேரில் சந்தித்து வலியுறுத்தவும், கூட்டணி தலைவர் சோனியாவை சந்தித்து அவர் மூலம் உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வலியுறுத்தவும் தவறிவிட்டார். தமிழ்நாட்டின் 20 மாவட்டங்களுக்கு காவிரி நீர் தான் குடிநீராக உள்ளதால், இதில் காலம் தாழ்த்து அலட்சியமாக செயல்பட்டால் தமிழ்நாடு உகாண்டா, சோமாலியா நிலைக்கு தள்ளப்படும்.

வருகிற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக), தனது நிலைப்பாட்டை நவம்பர் அல்லது டிசம்பரில் அறிவிக்கும். தற்போது பெரும்பான்மை நிர்வாகிகளும், தொண்டர்களும், எடப்பாடி பழனிசாமி இருக்கும் அணியில் இடம் பெறக்கூடாது என்று கூறுவதால் அதனை மனதில் வைத்து முடிவு செய்யப்படும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று, எனவே பெண் அர்ச்சர்கள் அதில் இடம் பெறுவதும் வரவேற்கதக்கது" என்றார்.

இதையும் படிங்க:“வீரலட்சுமியின் மற்றொரு அவதாரத்தை இனிமேல் பார்பீர்கள்”.. சீமானை எச்சரித்த வீரலட்சுமி!

ABOUT THE AUTHOR

...view details