தஞ்சாவூர்:நடப்பாண்டில், முன்பட்ட குறுவை சாகுபடியை மோட்டார் பம்பு செட், டீசல் இன்ஜின் வைத்து சாகுபடி செய்யும் விவசாயிகள் கடந்த ஏப்ரல் மாதமே தொடங்கினர். தற்போது இதற்கான அறுவடைப்பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
சரியான எடை, நியாயமான விலையுடன், மூன்று தினங்களில் வங்கிக்கணக்கில் உரிய பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பெரும்பாலான விவசாயிகள் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 10 நாட்கள் காத்திருந்தாலும் பரவாயில்லை எனக்காத்திருந்து நெல் போடுகிறார்கள்.
ஆனால், இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் கடந்த ஜூலை 30ஆம் தேதிக்குப் பிறகு நெல் போட்ட விவசாயிகள் யாருக்கும் இதுவரை வங்கி மூலம் பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை எனத்தெரிகிறது. இதனால், விவசாயிகள் உரிய நேரத்தில் தாங்கள் பெற்ற கடனை வட்டியுடன் திரும்ப செலுத்த முடியாமலும், பள்ளி, கல்லூரி தொடங்கப்பட்டு விட்டதால், தங்கள் வீட்டு குழந்தைகளுக்கு பள்ளி, கல்லூரி கட்டணங்களைக் கட்ட முடியாமலும், வங்கிகளில் நகைகளை வைத்து கடன் பெற்றவர்கள் அதனை உரிய காலத்தில் திரும்பப்பெற முடியாமலும் கடும் அவதியுற்றுள்ளனர்.