பாதிக்கப்பட்ட பெண் அமுதாவின் பேட்டி தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர், விஸ்வநாதபுரம் தெற்கு வீதியில் ஓட்டுநராக இருப்பவர் பாலச்சந்திரன் (53). இவரது மனைவி அமுதா (45) மாற்றுத்திறனாளி. இந்த தம்பதிக்கு, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்களுக்குரிய குடும்ப அட்டைக்கான பொருள் வழங்கும் ரேஷன் கடை திருலோகியில் அமைந்துள்ளது. அதில், அமுதா மாற்றுத்திறனாளி என்பதால், பாலச்சந்திரனே பெரும்பாலான சமயங்களில் குடும்ப அட்டைக்கான பொருளை வாங்கிச் செல்வது வழக்கம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, பணி நியமித்தமாக பாலச்சந்திரன் வெளியூர் சென்று இருந்த நிலையில், மனைவி அமுதா திருலோகி அங்காடிக்குச் சென்று பொருள் கேட்டுள்ளார். அப்போது, அங்குள்ள கைரேகை சரிபார்க்கும் சாதனத்தில் விரல் வைத்த போது, அவரது பெயர் அந்த குடும்ப அட்டையில் இல்லை என்பதால் அவரது ரேகை பதிவு மூலம் பொருள் பெற முடியாமல் வீடு திரும்பினார்.
இது குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது, "அமுதாவின் பெயர் அவர் உயிரிழந்து விட்டதாக கூறி நீக்கப்பட்டுள்ளதாக பதில் கிடைத்ததால் அதிர்ச்சியடைந்த பாலசந்திரனும், அமுதாவும், இதனை உறுதி செய்துகொள்ள உணவு பொருட்கள் வழங்கல் துறையின் கட்டணமில்லா சேவை வாயிலாக தனது குடும்ப அட்டை எண், ரேஷன் கடை விவரங்களுடன் தனது குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களின் பெயர் விவரத்தை கேட்டறிந்தார்.
அப்போது, குடும்ப அட்டையில், கணவர் பாலச்சந்திரன், மகன் மற்றும் மகள் ஆகிய மூவரின் பெயர் மட்டும் இருப்பதாகவும் ஏற்கனவே இந்த குடும்ப அட்டையில் இருந்த காவேரி (இரு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த பாலச்சந்திரனின் தாயார்) மற்றும் தற்போது உயிருடன் இருக்கும் மாற்றத்திறனாளியான அமுதாவின் பெயரும் அவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டதால் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் அளித்துள்ளனர்.
இதனால், கணவர் பாலச்சந்திரனும், அமுதாவும் கடும் வேதனைக்கும், பெரும் மனஉளைச்சலுக்கும் ஆளாகி, இந்த பிரச்னைக்கு எப்படி தீர்வு காண்பது, மீண்டும் அமுதாவின் பெயரை எப்படி குடும்ப அட்டையில் இணைப்பது? உயிருடன் இருக்கும் மாற்றுத்திறனாளி பெண்ணை அவர் உயிரிழந்து விட்டதாக நீக்கிய அலுவலர் யார்? அவர் எந்த ஆவணத்தின் அடிப்படையில் அந்த பெயரை நீக்கினார் என அதிகாரிகளிடம் கேட்டனர்.
இது குறித்து உணவு பொருட்கள் வழங்கல் துறையும், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், தவறுதலாக நீக்கப்பட்ட அமுதாவின் பெயரை மீண்டும் குடும்ப அட்டையில் இணைத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளி அமுதாவும், அவரது கணவர் பாலச்சந்திரனும் இணைந்து தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:"குழந்தையின் உயிரைக் காப்பாற்றவே கை அகற்றப்பட்டது" - விசாரணைக் குழு அறிக்கையில் பரபரப்பு தகவல்!