தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாட்டிலேயே முதன் முறையாக ட்ரோன் மூலம் நெற்பயிர்கள் ஆய்வு செய்து விவசாயம் - Thanjai district news

தஞ்சை: நாட்டிலேயே முதன் முறையாக ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நெற்பயிர்களை ஆய்வு செய்து விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

ட்ரோன் மூலம் நெற்பயிர்கள் ஆய்வு செய்து விவசாயம்

By

Published : Oct 17, 2019, 9:30 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள திருப்பழனம் கிராமத்தில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மேக்கர்ஸ் ஹைவ் நிறுவனம் இணைந்து தமிழ்நாடு அரசின் வேளாண்மைத்துறை உதவியுடன் நிரந்தர பசுமை புரட்சி திட்டத்தின்கீழ் ஆளில்லா சிறிய விமானத்தில் (ட்ரோன்) நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு பயிர்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய பரிசோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விமானம் சுமார் அரைமணி நேரத்தில் 200 ஏக்கர் பரப்பளவு உள்ள பயிர்களை படம் பிடித்து ஆய்வு செய்து அதன் தன்மைகளை பதிவு செய்யும். இந்த விமானத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள பயிர்கள் எந்த நிலையில் உள்ளது என்பதை துல்லியமாக கணிக்க முடியும். பயிர்களில் பாதிப்பு ஏற்படும்போது அதைக் கண்டறிந்து பதிவு செய்து தகவல் அளிக்கும். மேலும் பயிர்களில் நோய் தாக்குதல் இருந்தால் இதன் மூலம் தெரிந்து, அந்த பாதிப்பை செயலி மூலம் விவசாயிகளின் செல்போனுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

இந்த ட்ரோன் விமானம் அப்பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை பறக்கவிடப்பட உள்ளது. திருப்பழனம் கிராமத்தில் ஆளில்லா சிறிய விமானத்தை பறக்க முறைப்படி அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் தானியங்கி வானிலை ஆய்வு சாதனமும் அமைக்கப்பட உள்ளது. இச்சாதனம் சூரிய ஒளி சக்தியால் இயங்குகிறது. அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி வானிலை ஆய்வு மைய சாதனங்கள் வெப்பநிலை, மழை அளவு, காற்றின் ஈரப்பதம் ஆகிய தகவல்களை மட்டுமே அளிக்கும்.

ட்ரோன் மூலம் நெற்பயிர்கள் ஆய்வு செய்து விவசாயம்

ஆனால் இச்சாதனத்தின் மூலம் 12 கி.மீ. சுற்றளவில் நிலவும் வெப்பநிலை, மழை அளவு, காற்றின் ஈரப்பதம், காற்றின் அழுத்தம், காற்றின் திசை ஆகியவற்றை துல்லியமாக அறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டிலேயே முதன்முறையாக இந்த ஆய்வு முறை தஞ்சை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

இதையும் படிங்க:ரத்த மாதிரிகளை ட்ரோன் மூலம் கொண்டு செல்லும் திட்டம் அறிமுகம்!

ABOUT THE AUTHOR

...view details