தஞ்சாவூர்:தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 42 கோடி ரூபாய் மதிப்பில் புற்றுநோய் சிகிச்சை மைய கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா, 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புற்றுநோயினைக் கண்டறியும் அதிநவீன பாசிட்ரான் எமிசன் டோமோகிராபி ஸ்கேன் (PET CT SCAN) தொடக்கம் மற்றும் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூதலூர் அரசு மருத்துவமனையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவுக்கான புதிய கட்டடம் ஆகியவற்றை திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “புற்றுநோயை துல்லியமாக கண்டறிய வேண்டும் என்று தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் 25 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஆனால், தஞ்சாவூர் மருத்துவமனைக்கு வந்தால் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக கிடைக்கும். மற்ற நோயாளிகளுக்கு 11 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும். இதன் மூலம் தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்ட மக்கள் பயன் பெறலாம்” என்றார்.
இதன் பின்னர் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களில் இல்லாத அளவிற்கு இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழாவின்போது, செங்கல் கல்லை எடுத்து வைப்போம். ஆனால், இங்கு உள்ள அமைச்சர் செங்கல் கல்லிற்கு பிரசித்திபெற்றவர். அவருடைய ஸ்டைல், அடிக்கல் நாட்டிற்கு செங்கல் கல்லையும் வைப்பார். நமக்கு எதிர்ப்பு என்று வந்தால் டெல்லியை நோக்கி செங்கல் கல்லை உயர்த்தி காட்டக் கூடிய அமைச்சர்” எனத் தெரிவித்தார்.