தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது சத்திரப்பட்டி கிராமம். இங்கு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், மான் கொம்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்துவருகின்றனர். தினந்தோறும் காலையில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்கின்றனர்.
இவர்களுக்கு பயிற்சி பெற்ற சிலம்பாட்ட ஆசிரியர் பயிற்சியளித்துவருகிறார். இதில் மேலும் சிறப்பு என்னவென்றால், சிலம்பம் பயிற்சி கற்க வரும் மாணவர்கள், தங்களுடைய பயிற்சிக்கு ஆகும் செலவுகளை அவர்களே ஏற்பாடு செய்துகொள்கின்றனர். இவர்கள் பெற்றோர்களைச் சார்ந்து இல்லாமல், கேப்பைக் கூழ், கம்மங் கூழ் போன்ற இயற்கை உணவுகளை கிராமப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்துவருகின்றனர்.
அதில் கிடைக்கும் பணத்தை வைத்துக்கொண்டு சிலம்பம் பயிற்சிக்குத் தேவையான மூலப்பொருள்களை வாங்குவதற்கும், வெளியூரில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்வதற்கும் பயன்படுத்துகின்றனர்.