கொஞ்சம் பொறுங்கள் ! கல்லணை கால்வாயில் கால் நனைக்கும் முன் மேட்டூர் அணையைக் கொஞ்சம் எட்டிப் பார்த்து விடுவோம். கடந்த 1834ஆம் ஆண்டு ஆர்தர் காட்டன் என்ற வெள்ளையர் மேட்டூரில் அணை கட்ட முடிவெடுத்தார். அதற்கு அப்போதைய மைசூர் சமஸ்தானம் ஆட்சேபம் தெரிவித்தது.
சில பல முட்டுக்கட்டைகளுக்குப் பின், கடந்த 1923 ஆம் ஆண்டு மைசூரிடம் ஒப்புதல் பெற்று அணை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த முறை ஒருங்கிணைந்த தஞ்சாவூர் விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க, மைசூர் அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியவர், சர்.சி.பி. ராமசாமி அய்யர்; திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானான இவரது பூர்வீகம் தஞ்சாவூர்.
காவிரி பாசனத்தால் தஞ்சை வளங்கொழிக்கும் பூமியாக இருந்தாலும், மேட்டு நிலமான தெற்கு தஞ்சை வானம் பார்த்து ஏங்கும் புஞ்சை பூமியாகவே இருந்தது. காவிரியைப் பிரித்து தெற்கு தஞ்சைக்குள் ஒரு ஆற்றைக் கொண்டு செல்ல விரும்பிய சர்.சி.பி. ராமசாமி அய்யர், கல்லணையிலிருந்து கால்வாய் ஒன்றை வெட்டும் திட்டத்தைத் தீட்டினார். அவரின் திட்டத்திற்கு வடிவம் தந்தார் மேட்டூர் அணையை வடிவமைத்த கர்னல் டபிள்யூ.எம்.எல்லிஸ்.
இங்கிலாந்தின் தெருக்களுக்குள் துள்ளியோடும் தேம்ஸ் நதியை மாதிரியாகக் கொண்டு, தஞ்சை தெருக்களுக்குள் ஓடுமாறு கல்லணை கால்வாயை வடிவமைத்தார் கர்னல் டபிள்யூ.எம்.எல்லிஸ். மேட்டூர் அணை கட்டப்பட்ட அதே காலக்கட்டத்தில் இக்கால்வாய் வெட்டும் பணியும் தொடங்கி, 1934 ஆம் ஆண்டில் நிறைவடைந்தது.
கல்லணையின் தெற்கு பகுதியிலிருந்து தன் பயணத்தைத் தொடங்குகிறது மன்னர் காலத்திற்குப் பின்னர் வெட்டப்பட்ட பெரிய இந்த பாசன ஆறு. இக்கால்வாய் தஞ்சை நகருக்குள் வராமலேயே, ஆலக்குடியிலிருந்து தெற்கு நோக்கி தன் திட்டமிட்ட பயணத்தைத் தொடர்ந்திருக்க முடியும். சர்.சி.பி. ராமசாமி அய்யரின் பேரவாவால், தஞ்சை பெரிய கோயிலின் அகழியை முத்தமிட்டு, நகருக்குள்ளும் ஓடிச் செல்கிறது இந்தப் புது ஆறு.
கல்லணையின் தலையணையிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் தொண்டியில் உள்ள மும்பாலை வரையில் 149 கி.மீ. ஓடிக் கலக்கும் இந்த புது ஆறு மனித முயற்சியின் மாபெரும் சாதனை என்றால், இதன் கட்டுமானத் தொழில் நுட்பம் மனிதனின் கற்பனை வளத்தின் உச்சம்! எல்லா நீரோட்டங்களும் மேட்டிலிருந்து பள்ளம் நோக்கி ஓடிச் செல்வது இயற்கையின் விதியென்றால், மனிதன் முயற்சித்த இந்த புது ஆறு பள்ளத்திலிருந்து மேடு நோக்கி ஓடும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.