தஞ்சாவூர்:இன்றைய நாகரிக உலகில் சிறு குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் உருவாகிவிட்டன. பிளாஸ்டிக், ரப்பர் போன்ற விளையாட்டுப் பொருட்கள் மற்றும் நடைப் பயிற்சிக்கு பிளாஸ்டிக் கால்களால் ஆன வாக்கர் ஆகியவை உருவாகிவிட்டன. குழந்தைகள் பிறந்து தவழ்ந்து, பின்னர் தங்களது சொந்தக் காலில் நடக்க முயற்சி செய்வதற்கு நடைவண்டி என்ற ஒன்று அந்தக் காலம் முதலே முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
அப்படி நடைவண்டியைப் பிடித்து குழந்தைகள் தள்ளிச் செல்லும் அழகே தனிச் சிறப்பு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்நிலையில் தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்த பார்வதி (53) மற்றும் ஏகாம்பரம் தம்பதியினர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாரம்பரியமாக மரப்பலகையினால் சிறு குழந்தைகள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்குத் தேவையான நடை வண்டியை அழகாக வண்ணங்களுடன் செய்து மணி வைத்துத் தயாரித்து வருகின்றனர்.
மேலும் குழந்தைகளுக்குத் தேவையான நடைவண்டி, தொட்டில் கட்டை, சப்பாத்தி கட்டை மற்றும் மாணவர்களின் விளையாட்டுப் பொருளான பம்பரக்கட்டை ஆகியவற்றையும் ஆர்டரின் பேரில் செய்து வருகின்றனர். தைல மரக்கட்டையை வாங்கி அதை சீராக அறுத்து, கடைசல் போட்டு, பட்டசிலை போட்டு தேய்த்து மீண்டும் அதற்கு விதவிதமான அரக்கு கலர் பாலீஸ் போட்டு நடை வண்டியை இவர்கள் தயார் செய்து வருகின்றனர்.
இவர்கள் செய்த நடை வண்டி பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு சென்றுள்ளன. இந்நிலையில் விலைவாசிக்கு ஏற்ப தற்போது இந்த நடை வண்டியை ஆர்டரின் பெயரில் மட்டும் செய்து, விற்று அவர்களுக்கு தேவையான வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.