கரோனா போன்ற பேரிடர் காலங்களில், தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு அரசுக்கு தாராளமாக நிதி வழங்கும்படி முதலமைச்சர் பழனிசாமி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். நன்கொடைகளுக்கு வருமானவரிச் சட்டம் பிரிவு 80(G) கீழ் 100 விழுக்காடு வரிவிலக்கு உண்டு என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 100 ரூபாய் தொகையாக கொடுத்தாலும் அது பெருந்தொகையே என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று, தஞ்சாவூரில் ஏழு வயது சிறுவன் நிவாரணம் அளித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை கீழையூர் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவடிவேல் -அகிலா தம்பதியினரின் மகன் மோகன்(7). இரண்டாம் வகுப்பு படித்து வரும் சிறுவன், தனது பெற்றோர் செலவுக்காக தினமும் கொடுக்கும் பணத்தை சேமித்து வைத்து வந்துள்ளான்.
முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்று, இரண்டு ஆண்டுகளாக சேர்த்து வைத்திருந்த 3000 ரூபாய் சில்லறை, பணம் உள்ளிட்ட காசுகளை தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 2000 ரூபாயும், மத்திய அரசாங்கத்தின் பிரதமர் நிவாரண நிதிக்கு ஆயிரம் ரூபாயும் தனது தாய் தந்தையுடன் வந்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவிடம் வழங்கினார்.
கரோனா நிவாரண நிதி வழங்கிய சிறுவன் சிறுவனின் நிவாரண நிதியை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சிறுவனை வெகுவாக பாராட்டினார். இந்த சிறுவயதில் மற்றவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தைக் கண்டு பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
இதனையடுத்து, சிறுவன் மோகன் கரோனா விழிப்புணர்வு வீடியோவில் "மக்கள் அனைவரும் அரசின் உத்தரவுப்படி 144 தடை உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்” என கையெடுத்து கும்பிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:வீடு தேடி வரும் டிராக்டர்: விவசாயிகளை ஊக்கப்படுத்த டிராக்டர் மூலம் இலவச உழவு