தஞ்சாவூர்:நடனம் என்பது பெரும் கலை, நடனத்தில் தனி முத்திரை பதிப்பது என்பது பெரும் முயற்சியாகும், இந்நிலையில் நடனத்தில் தனது இரண்டு கால்களில் உள்ள 10 விரல்களையும் மடக்கி நடனமாடி உலக சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், முழு மூச்சோடு சாதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறார், பள்ளி மாணவி ரோஷினி (14).
இவர் ஒன்பதாம் வகுப்பு அரசுப் பள்ளியிலும் இவரது தம்பி கோசித்தார்சன்(10) நான்காம் வகுப்பு தனியார் பள்ளியிலும் திருவாரூரில் படித்து வருகின்றனர். இவர்களின் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் ஊராகும். தாயார் அமுதாவின் பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவி ரோஷினி மற்றும் கோசித்தார்சன் இருவரும் உலக சாதனைப் படைக்க வேண்டும் என்ற முயற்சியில் நம்பிக்கையுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுவாக நடனம் ஆடும்போது பாதம் தரையில் படியும்படி நடனம் ஆடுவார்கள், மேலை நாடுகளில் குதிகாலில் நடனம் ஆடுவார்கள். ஆனால், கால் விரல்கள் பத்து விரலையும் மடக்கி, நடனம் ஆடுவது என்பது முதன்முறையாக அரிதாக தெரிகிறது. தஞ்சாவூரில் உறவினர்கள் இல்லத்தில் மாணவர்கள் இருவரும் கால் விரல்களை மடக்கி நடனமாடி அசத்தினர். இதனைப் பார்த்த அவரது உறவினர்கள், அவர்களைப் பாராட்டினர்.
தொடர்ந்து பள்ளி மாணவர்கள் இருவரும் கால் விரல்களை மடக்கி நடனம் ஆடும் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பரதநாட்டியம், கிராமியப் பாடல்கள் மற்றும் சினிமா பாடல்களுக்கு ஏற்றார் போல் தங்களது கால் விரல்களை மடக்கி நடனமாடி இருவரும் அசத்துகின்றனர். மேலும் பல்வேறு மேடை நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்களது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.