தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகர திமுக சார்பில் நேற்று (ஜூலை 11) இரவு கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்க பொதுக்கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் மாவட்ட திமுக பிரதிநிதி மொ.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் சு.கல்யாணசுந்தரம் மற்றும் தொ.மு.ச.பொதுச் செயலாளர் மு.சண்முகம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், கும்பகோணம் எம்எல்ஏ க.அன்பழகன், மாநகரச் செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான சு.ப.தமிழழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் பங்கேற்றனர்.
இந்த பொதுக் கூட்டத்தில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “தலைவர்களின் நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடும்போது, அவர்களின் ஆட்சி இருக்காது. ஆனால் கட்சியும், ஆட்சியும், ஒருசேர அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டும் அற்புதமும், ஆச்சரியமும் கருணாநிதி என்ற மகத்தான தலைவர் ஒருவருக்குத்தான் கிடைக்கும்.
ஒவ்வொரு தலைவருக்கும் அடையாளமாக ஒன்று அல்லது இரண்டைத்தான் சொல்லலாம். ஆனால், கருணாநிதிக்கு எண்ணற்ற அடையாளங்களை பட்டியல் இட முடியும். சிறை சென்ற களப்போராளியாக, இலக்கியவாதியாக, ஆட்சி திறன் மிக்கவராய் திகழ்ந்து எண்ணற்ற அடையாளங்களைக் கொண்ட ஒப்பற்ற தலைவர். இது தனிமனிதனுக்கான விழா அல்ல, கருணாநிதி என்ற தத்துவத்திற்கான விழா.
இந்தி எதிர்ப்பு போராட்ட துவக்க காலமான 1937-1938-இல் இளைஞராக பங்கேற்றவர், பின்னர் இதே போராட்டம் 1965இல் உச்சம் தொட்டபோதும் போராட்ட களத்தில் நின்று சிறை சென்றவர் கருணாநிதி. பாரதியால் செய்ய முடியாததை செய்து காட்டியவர் கருணாநிதி. சீனம், கிரேக்கம், யூதர்களின் மொழி, சமஸ்கிருதம், தமிழ் உள்ளிட்ட ஆறு மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றது. பிற செம்மொழிகள் எல்லாம் அந்த அந்த மாநிலங்களால் பின்பற்றப்பட்டது. ஆனால் தமிழ் மட்டும்தான் மத்திய அரசிதழிலில் செம்மொழி என குறிப்பிட்டு ஆணை வழங்கப்பட்டது. அதற்கு காரணம், கருணாநிதி.
உச்ச நீதிமன்றமே பேனா நினைவுச் சின்னம் வைக்கலாம் என அனுமதியளித்துள்ள நிலையில், பலர் வைக்க கூடாது என எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றனர். கை ரிக்ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக்ஷாவாக மாற்றி உத்தரவிட்டது கருணாநிதியின் பேனா. ஊனமுற்றோரை மாற்றத்திறனாளி என அழைக்க வைத்து உத்தரவிட்டது கருணாநிதியின் பேனா. எனவே, அவருக்கு பேனா நினைவுச் சின்னம் வைப்பதில் தவறில்லை.