தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணிமாறுதல் பெற்ற தஞ்சை மாநகராட்சி ஆணையர்.. கண்ணீர் தழுவல் உடன் பிரியாவிடை அளித்த உறுப்பினர்கள்! - Thanjavur news

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக பதவி வகித்த சரவணக்குமார் மாற்றலாகி கரூர் மாவட்டத்திற்கு பணிக்குச் செல்வதால், மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் ராமநாதன் மற்றும் ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் கண்ணீர் மல்க பேசினர்.

கரூர் மாவட்டத்திற்கு பணி மாற்றலாகிய கமிசனர் சரவணக்குமார் பணியை பாரட்டி வாழ்த்து
கரூர் மாவட்டத்திற்கு பணி மாற்றலாகிய கமிசனர் சரவணக்குமார் பணியை பாரட்டி வாழ்த்து

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2023, 10:21 PM IST

கரூர் மாவட்டத்திற்கு பணி மாற்றலாகிய கமிசனர் சரவணக்குமார் பணியை பாரட்டி வாழ்த்து

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியில், மாமன்றக் கூட்டம் மாநகராட்சி மேயர் ராமநாதன் தலைமையில் துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணக்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக பதவி வகித்த சரவணக்குமார் மாற்றலாகி கரூர் மாவட்டத்திற்கு பணிக்குச் செல்கிறார்.

இதனையடுத்து மாநகராட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற ஆணையர் சரவணக்குமாரை, வார்டு கவுன்சிலர்கள் அவரது பணியை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக, தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில், இந்திய அளவில் கலாச்சாரத்திற்கான மூன்றாம் இடம் விருது பெற்றதற்கும், கடன் இல்லா மாநகராட்சி, மாநகராட்சி கடை ஏலம் மூலம் ரூ.30 கோடி வைப்புத் தொகை பெற்றது, ஆக்கிரமிப்பு அகற்றுதல், குளம் சீரமைத்தல் உள்ளிட்ட பல பணிகளை பாராட்டி பேசினர்.

பின்னர் மேயர் ராமநாதன் பேசும்போது, கண்ணீருடன் அவரை புகழ்ந்து பேசி, மீண்டும் பதவி உயர்வு பெற்று தஞ்சாவூருக்கு மாவட்ட கலெக்டராக வர வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்தார். அப்போது அருகில் இருந்த ஆணையர் சரவணக்குமாரும் கண் கலங்கினார். பின்னர் ஆணையர் சரவணகுமார் பேசும்போது, “தஞ்சையில் பணியில் சேர்ந்தபோது ஆக்கிரமிப்பு இடங்கள் அதிகமாக இருந்தது.

அந்த ஆக்கிரமிப்பு தற்போது அகற்றப்பட்டது. மாநகராட்சி தேர்தலை முன்மாதிரியாக நடத்தி, தஞ்சாவூரில் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து வார்டுகளிலும் பணிகள் செய்யப்பட்டன. மேயருக்கும், எனக்கும் (ஆணையருக்கும்) சகோதர உணர்வுடன் நட்பு இருந்ததால் பணிகளை சிறப்பாக செய்ய முடிந்தது” என்று தான் கடந்து வந்த பாதையை கண்ணீருடன் தெரிவித்தார்.

பின்னர் மாநகராட்சி சார்பில் ஆணையர் சரவணக்குமாருக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டு, கவுன்சிலர்கள் சால்வை அணிவித்தும், புத்தகம் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர். மேயரும், ஆணையரும் கண்கலங்கிய இந்த நிகழ்ச்சி அங்கு இருந்த கவுன்சிலர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

முன்னதாக மாநகராட்சி அலுவலகம் அலங்கரிக்கப்பட்டு, சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. ஆணையரை பாராட்டும் விதமாக ஆணையர் புகைப்படத்துடன் ‘சரித்திர நாயகர் சரவணக்குமார் வந்தார், இதயங்களை வென்றார்’ என 32 அடி ப்ளக்ஸ் பேனர் அச்சிடப்பட்டு, அதில் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை எழுதி இருந்தனர்.

இந்நிலையில், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக இருந்த மகேஸ்வரி பணிமாறுதலில், தஞ்சாவூர் மாநகராட்சி புதிய ஆணையராக நேற்று (செப்.29) சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சாவூரில் சிறப்பான பணியை செய்த ஆணையர் சரவணக்குமாருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் இருந்தனர். இதனால் மாநகராட்சி அலுவலகம் அதிக கூட்டத்துடன் காணப்பட்டது.

இதையும் படிங்க:ரூ.2,000 நோட்டை மாற்றுவதற்கு அக்.07 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details