தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின நிகழ்ச்சிகள் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர்மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ள இருக்கிறார்.
பின்னர் அனைத்து துறை சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதும், சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இதையொட்டி வருவாய்த் துறை சார்பில் தஞ்சாவூர் நகரக் கிராம உதவியாளராகக் கீரை கொல்லை வருவாய் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் ( 56), முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
பின்னர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து விருந்தினர்களுக்கான நாற்காலிகளை ஏற்றிக்கொண்டு ஆயுதப்படை மைதானத்திற்குச் செல்ல இருந்தார். அப்போது சுமார் இரவு 7 மணியளவில் அலுவலகத்தில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது, உடனடியாக அங்கு பணியிலிருந்த சக வருவாய்த்துறையினர் அவரை உட்கார வைத்து அவருக்குத் தண்ணீர் கொடுத்துள்ளனர்.
ஆனால் அவர் சிறிது நேரத்திலேயே மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். பின்னர் அவரை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். குடியரசு தின விழாவில் ஈடுபட்டிருந்த வருவாய்த் துறை ஊழியர் உயிரிழந்தது வருவாய் துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆளுநர் அழைப்பை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் தேநீர் விருந்தில் கலந்து கொள்வாரா?