தஞ்சாவூர்:தஞ்சை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர், கீதா. ஆசிரியையான இவர், கடந்த டிசம்பர் 20ஆம் தேதி காலை வழக்கம்போல் தனது மகளுடன் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் வீட்டின் கதவு மற்றும் பீரோவை உடைத்து, 48 பவுன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றுள்ளார்.
பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு வந்த கீதா, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகைகள் திருட்டு போயுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மேலும், தனிப்படை போலீசார் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை சித்ரா நகரைச் சேர்ந்த வெங்கடேசன் (33) என்பவர், இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார், வெங்கடேசன் வீட்டிற்குச் சென்று அவரைக் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் வெங்கடேசனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், நகை மற்றும் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டு, திருடிய நகைகளை வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஆயுதபூஜை அன்று தஞ்சை சரபோஜி கல்லூரியில் வார்டனாக பணியாற்றும் ஆறுமுகம் என்பவரின் வீட்டில் இருந்து, 12 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடியதும் வெங்கடேசன் என தெரிய வந்துள்ளது.