தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டுக்கோட்டையில் நகைக்கடை உரிமையாளர் தற்கொலை; போலீஸாரால் நிகழ்ந்தது என வியாபாரிகள் போராட்டம் - காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்எல்ஏ ரெங்கராஜன்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் ரயில் முன் பாய்ந்து நகைக்கடை உரிமையாளர் தற்கொலை,செய்துகொண்ட விவகாரத்தில் போலீசாரைக் கண்டித்து வியாபாரிகள் கடைகளை அடைத்துப் போராட்டம் நடத்தி உள்ளனர்.

பட்டுக்கோட்டையில் நகைக்கடை உரிமையாளர் தற்கொலையால் வியாபாரிகள் போராட்டம்
பட்டுக்கோட்டையில் நகைக்கடை உரிமையாளர் தற்கொலையால் வியாபாரிகள் போராட்டம்

By

Published : Jun 27, 2023, 3:03 PM IST

பட்டுக்கோட்டையில் நகைக்கடை உரிமையாளர் தற்கொலையால் வியாபாரிகள் போராட்டம்

தஞ்சை: பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர், ராஜசேகரன் (வயது 58). இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளராக பொறுப்பில் இருந்து வந்துள்ளார். இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் ராஜசேகரன் கடந்த 25 ஆண்டுகளாக பட்டுக்கோட்டைத் தேரடி தெருவில் சொந்தமாக நகைக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இவர் திருட்டு நகையை வாங்கியதாகக் கூறி கடந்த ஜூன் 22ஆம் தேதி திருச்சி கே.கே. நகர் குற்றப்பிரிவு போலீசார் ராஜசேகரனின் நகைக்கடையில் சோதனை நடத்தி உள்ளனர். பின்னர் ராஜசேகரன் மற்றும் அவருடைய மனைவி லட்சுமி இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். இதனை அடுத்து நகைக்கடை வியாபாரிகள் உள்ளிட்டோர் முயற்சியால் நேற்று முன்தினம் ஜூன் 25ஆம் தேதி ராஜசேகரன் மற்றும் அவரது மனைவி வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

இருப்பினும் ராஜசேகரன் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் நேற்று முன்தினம் இரவு வெளியில் சென்று வருவதாகக் கூறி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது இரவு செட்டியக்காடு என்ற பகுதிக்குச் சென்ற அவர் வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சென்ற விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அவருடைய உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்பு ராஜசேகரனின் உடல் உடற்கூராய்விற்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் மன வேதனை அடைந்த நகைக்கடை உரிமையாளர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் எனும் தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் போலீசாரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து, முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி, மாவட்டச் செயலாளர்கள் பாரதி, முத்து உத்திராபதி, நிர்வாகக் குழு உறுப்பினர் பக்கிரிசாமி, நகைக் கடை உரிமையாளர்கள் மற்றும் வணிகர் சங்கத்தினர் உள்ளிட்டோர் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக கடைவீதிகளில் ஊர்வலமாகச் சென்றனர்.

காலை முதல் நகைக்கடைகள், நகைப் பட்டறைகள் அடைக்கப்பட்டு இருந்தன. வணிகர்களும் தங்களது கடைகளை அடைத்து எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதனை அடுத்து ரயில்வே டிஎஸ்பி பிரபாகர், உதவி கலெக்டர் பிரபாகரன், தாசில்தார் ராமச்சந்திரன், பட்டுக்கோட்டை காவல் டிஎஸ்பி பிரித்விராஜ் சவுகான் உள்ளிட்டோர் வியாபாரிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது திருச்சி கே.கே. நகர் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ராஜசேகரனின் உடல் அவரது குடும்பத்தினருக்கு ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து பட்டுக்கோட்டை காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்எல்ஏ ரெங்கராஜன், “பட்டுக்கோட்டையைச் சேர்ந்த நகை வியாபாரி ராஜசேகரன் இறப்பிற்கு காரணமான போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் இதில் தலையிட்டு சிபிசிஐடி விசாரணைக்கு கொண்டு சென்று தக்க நீதி கிடைக்க வேண்டும்” என்று கூறினார். இந்தப் போராட்டத்தால் பட்டுக்கோட்டை பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

இதையும் படிங்க:டிப்டாப் உடையுடன் புது ரூட்டில் உணவு, செல்போன் திருடும் நபர்.. சென்னை போலீசார் வலைவீச்சு!

ABOUT THE AUTHOR

...view details