தஞ்சாவூர்:கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்கரபாணி, இந்து முன்னணி அமைப்பின் மாநகரச் செயலாளராக கடந்த 5 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.
நேற்று காலை பலத்த சத்தத்துடன் தனது வீட்டின் வாசலில், மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றதாக காவல் துறையினருக்கும், இந்து முன்னணி நிர்வாகிகளுக்கும், இந்து அமைப்பின் முக்கியப் பிரமுகர்களுக்கும் தகவல் தந்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து தஞ்சை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட உயர் காவல் அலுவலர்கள் நேரில் வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் சக்கரபாணியிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து அப்போது பேட்டி அளிக்க மறுத்து, அங்கிருந்து விரைந்து புறப்பட்டு சென்றபின் இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர், இந்தச் சம்பவம் இந்து அமைப்புகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்துள்ளது என பேட்டியளித்தனர். மேலும் தஞ்சையில் இருந்து தடய அறிவியல் நிபுணர் குழு, போலீஸ் தனிப்படையினர் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தஞ்சையில் இருந்து மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட சக்கரபாணியிடமும் போலீசார் தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில், சக்கரபாணியே தன்னுடைய சுய விளம்பரத்திற்காக, மர்ம நபர்கள் தனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகம் நடத்தியது தெரியவந்தது.