தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் மாசுபாட்டைக் கட்டுபடுத்த பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் நிலையில், தற்போது தஞ்சாவூரில் நெகிழி இல்லா மாவட்டமாக உருவாக்க கண்காட்சி போன்ற புது முயற்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனையொட்டி தஞ்சை பெரிய கோயிலில் நெகிழி மாற்று பொருட்கள் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சி இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் உலகப்பிரசித்திபெற்ற தஞ்சை பெரிய கோயில் நெகிழி இல்லா பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் மட்டுமே நடந்த இந்த கண்காட்சியில், நெகிழி மாற்றுப் பொருட்களான காகிதப் பொருட்கள், பனை ஓலை பொருட்கள், சணல் பொருட்கள், தென்னை, வாழை நார் பொருட்கள், களிமண் பொருட்கள், துணி பொருட்கள், விவசாய, மூங்கில் பொருட்கள், மட்கும் மற்றும் துணி விளம்பரப் பதாகை பொருட்கள் ஆகியவை இடம் பெற்றிருந்தன.
கண்காட்சியில் பங்குபெற்ற கல்யாணி (75) என்ற வயதான மூதாட்டி, தனது தொழிலான மூங்கில் கூடை முடைதல் தொழில் மூலம் உருவாக்கிய மூங்கில் தட்டு, முறம், ஆகியவற்றை காட்சிக்கு வைத்திருந்த நிலையில் அவற்றை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். மூதாட்டி வைத்திருந்த அனைத்து பொருட்களையும் ரூபாய் 2000-க்கு மாவட்ட ஆட்சியர் வாங்கியதுடன், அவரை அவரது வீட்டில்விட அலுவலர்கள் ஜீப்பில் அழைத்துச்சென்றது பார்வையாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ரவிச்சந்திரன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், இண்டாக் கௌரவ செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் இங்கு வருவதால் அவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தக் கண்காட்சி உலகப்பிரசித்திபெற்ற தஞ்சை கோயில் அரங்கில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிறுமிகளை ஆபாச படம் எடுத்த ஆராய்ச்சி மாணவர் கைது.. பிரதமர் அலுவலகத்திற்கு வந்த மெயில்..