பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாஸ், தனது 85வது பிறந்தநாளை முன்னிட்டு, 90 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்து, 85 வகையான சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார். தஞ்சாவூர்: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது 85வது பிறந்தநாளை முன்னிட்டு, 90 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்து, 85 வகையான சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் 85வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் கும்பகோணத்தில் இன்று (செப்டம்பர் 10ஆம் தேதி), 90 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்தார். இந்த திருமணங்கள், கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள, எஸ்.இ.டி தனியார் திருமண மண்டபத்தில் மிகப்பெரிய பந்தலின் கீழ் நடைபெற்றது.
13 சமூகங்களைச் சேர்ந்த 90 ஜோடிகளுக்கு, குத்துவிளக்கு, பீரோ, கட்டில், பாய், தலையணை, ஜமுக்காளம், தென்னங்கன்று உள்ளிட்ட 85 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த மாபெரும் இலவச திருமண விழா, ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க ஸ்டாலின், செந்தமிழ் செல்வி தம்பதியரின் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது.
இந்த மாபெரும் இலவச திருமணங்களை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையேற்று, தமிழ் முறைப்படி நடத்தி வைத்தார். அதனை அடுத்து ஒவ்வொரு ஜோடிகளும், தனித்தனியாக மேடை ஏறி வந்து, ராமதாஸிடம் ஆசி பெற்று, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில், மணமக்களின் பெற்றோர், உறவினர்கள், பாமக கட்சியினர் மற்றும் வன்னியர் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திருமணம் விழா நிறைவு பெற்ற பிறகு, ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி செந்தமிழ் செல்வி ஆகியோர், ஒவ்வொரு ஜோடிகளுக்கும் உரிய 85 வகையான சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தினர்.
மேலும், ஒவ்வொரு ஜோடிகளுக்கும் ஒரு தனி வாகனம் ஏற்பாடு செய்து தரப்பட்டு, அதில் சீர்வரிசை பொருட்கள் முறையாக அவரவர் வீட்டில் கொண்டு சேர்த்து ஒப்படைக்கப்பட்டது. மணவிழாவிற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த, பாமக நிறுவனர் ராமதாஸ், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற, காவல்துறை முயற்சித்து வருகிறது. அதற்கு அவ்வபோது நான் யோசனைகள் சொல்லி வருகிறேன்.
ஒரே நாடு ஒரே தேர்தல் நல்லது தான். அரசிற்கும் செலவுகள் குறையும். இப்போதுள்ள இந்தியா என்ற பெயரே போதும். தஞ்சையில் பல லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட குறுவை சாகுபடி நீர் இன்றி பொய்த்து போய்விட்டது. இது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியும், கர்நாடக அரசின் மனம் இளகவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி, அனைவரையும் ஒரு தாய் மக்கள் என்ற கண்ணோட்டத்துடனே தான் பார்க்கிறது.
இதற்காக நானே முன்னின்று பல மாநாடுகளை நடத்தியுள்ளேன். அனைத்து தரப்பு மக்களுக்கும் சமூக நீதி வேண்டும் என்று பாமக தொடர்ந்து போராடி வருகிறது. பாமகவின் பெரு முயற்சினால் தான், அப்போதைய தமிழக முதலமைச்சர், மு.கருணாநிதியிடம் வாதாடி, போராடி அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீதமும், இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடும் பெற்றுத் தந்தோம்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாமக நிலைப்பாடு குறித்து கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி விவாதித்து முடிவு எடுக்கும். பாமக 39 தொகுதிகளையும் கைப்பற்ற வாய்ப்புண்டு” என்று கூறினார்.
இதையும் படிங்க:"அண்ணாவை பின்பற்றுகிறார் மோடி... உதயநிதியின் தலைக்கான விலை சரிதான்" - ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்!