தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு சிறுநீரகம் செயலிழந்த சிறுமிக்கு வெற்றிகரமாக டயாலிசிஸ் சிகிச்சை.. தஞ்சை அரசு மருத்துவர்கள் அசத்தல்!

Thanjavur GH: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட சிறுநீரகம் செயலிழந்த 9 வயது சிறுமிக்கு வெற்றிகரமாக டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்தார்.

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிறுநீரகம் செயலிழந்த 9 வயது சிறுமிக்கு வெற்றிகரமாக டயாலிசிஸ் சிகிச்சை
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிறுநீரகம் செயலிழந்த 9 வயது சிறுமிக்கு வெற்றிகரமாக டயாலிசிஸ் சிகிச்சை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 11:03 AM IST

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிறுநீரகம் செயலிழந்த 9 வயது சிறுமிக்கு வெற்றிகரமாக டயாலிசிஸ் சிகிச்சை

தஞ்சாவூர்:தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரத்தநாடு அருகே துறையூரை சேர்ந்த 9 வயது சிறுமி பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு கடந்த 4ஆம் தேதி ரத்தம் உறைதல் குறைபாடு மற்றும் தற்காலிக சிறுநீரக செயலிழப்பால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பாம்பு கடி விஷ முறிவு மருத்துவம் மற்றும் டயாலிசிஸ் சிகிச்சையும் தொடர்ந்து அளிக்கப்பட்டு 27 நாட்களுக்குப் பிறகு பூரண குணமடைந்து நேற்று (நவ 30) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இந்த மருத்துவமனையில் கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரை 981 பாம்பு கடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 903 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் 311 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 9 வயது சிறுமிக்கு வெற்றிகரமாக பாம்பு கடி மருத்துவ சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் பாராட்டு தெரிவித்தார்.

மேலும் ஆண்டுக்கு சுமார் 1400 பேர் விஷப் பாம்பு கடியால் உள்நோயாளிகளாக வருகின்றனர். அதில் 18 முதல் 20 வரை உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே விஷப் பாம்பு கடிக்கு கை வைத்தியம் என்ற பெயரில் காலில் ரத்தத்தை உறிவது, பச்சிலை தடவுவது போன்றவை செய்யாமல், காலத்தை வீணடிக்காமல் விரைவாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கோ அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ சென்று விஷ முறிவு இலவச சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம் என்று கூறினார்.

மேலும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக 9 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இதில் 5 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்து உறுப்பு தானம் வழங்கிய 5 கொடையாளிகளிடமிருந்து பெறப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இவை அனைத்தும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை 63 நோயாளிகள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் காத்திருக்கின்றனர். சிறுநீரகப் பிரிவு மூலம் தற்காலிக மற்றும் நிரந்தர சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 31 டயாலிசிஸ் இயந்திரம் மூலம் மாதந்தோறும் 2000த்திற்கும் அதிகமான டயாலிசிஸ் சிகிச்சை இந்த மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: தஞ்சையில் பட்டா மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் உட்பட 2 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details