தஞ்சையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் தஞ்சாவூர்:புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு, கும்பகோணத்தில் ஒன்பதடி உயரம் கொண்ட விஷ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயசுவாமி இன்று (அக்.14), திருப்பதி பாலாஜி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 1008 திரிசதி மற்றும் சகஸ்ரநாம பூஜைகளும், புதிய 5 ரூபாய் நாணயங்கள் கொண்டு சிறப்பு அர்ச்சனை செய்த பிறகு, 16 விதமான சோடச உபசாரங்கள் செய்து, கோபுர ஆர்த்தியும், பஞ்சார்த்தி செய்யப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர். தரிசனம் செய்த அனைவருக்கும், தீர்த்தம் மற்றும் திருப்பதி லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.
சர்வ தேவதா சக்திகளின் அம்சம், புத்தி, கீர்த்தி, பலம், தைரியம், மனோ சக்தி, வேண்டியவர்களுக்கு வேண்டியதை அருளும் வரப்பிரசாதி, வரம் அருளும் மூர்த்தியாகப் போற்றி வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. கிரக தோஷம் நீங்க வடை மாலை சாற்றியும், கல்வியில் தடை, சுனக்கம் நீங்க வெற்றிலை மாலை சாற்றியும், பிரிந்த தம்பதியினர் சேர தேங்காய் மாலையும், தடைகள் நீங்கி உயர் பதவி அடைய துளசி மாலை சாற்றியும், தீராத நோய் தீர வெண்ணெய் காப்பு சாற்றியும், குழந்தை பேறு கிட்ட சந்தன காப்பும் சாற்றி வழிபடுவது முக்கிய பிராத்தனைகள் ஆகும்.
இத்தகைய பெருமை கொண்ட ஜெயமாருதி ஆஞ்சநேயரை போற்றி வணங்கும் வகையில், கும்பகோணம் பாலக்கரையில் 9 அடி உயரம் கொண்ட விஷ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமிக்கு, அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவும், தேவையான அளவிற்கு நல்ல மழை பெய்து, நவதானியங்கள், காய்கனிகள் உள்ளிட்ட அனைத்து வகை வேளாண் பொருட்களும் அமோக விளைச்சல் காணவும், அனைத்து வகை தொழில்களும் மேன்மை பெறவும், உலக மக்கள் நலன் வேண்டியும் பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாத மகாளய அமாவாசையான இன்று(அக்.14), ஜெயமாருதி ஆஞ்சநேயசுவாமி விசேஷமாக திருப்பதி பாலாஜி அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்றிரவு பூஜைக்கு பிறகு, 1008 புதிய 5 ரூபாய் நாணயங்கள் அனைத்தும், பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இத்தலத்து ஆஞ்சநேய சுவாமியிடம் தங்களது வேண்டுதலை வெள்ளை தாளில் எழுதி, அதனை மட்டை தேங்காயுடன் சிவப்பு நிறத்துணியில் வைத்து கட்டி, அமாவாசை பூஜையில் வைத்து மனமுருக பிராத்தனை மேற்கொண்டால் எண்ணிய காரியம் மூன்று அமாவாசை காலங்களுக்குள் அதாவது 90 நாட்களில் முழுமையாக நிறைவேறும் என்பது இப்பகுதி அனுமன் பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க:குலசை தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்!