தஞ்சாவூர்: கும்பகோணம் காவிரிக் கரையின் இராஜேந்திரன் படித்துறையில் உள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயில் பழமையானது. இக்கோயில் நிர்வாக குழு சார்பில் சோழமண்டல செழுமைக்கும், தெய்வ பக்திக்கும் காரணமாக திகழும் அன்னை காவிரிக்கு, நன்றி தெரிவித்து வழிபடும் காவிரி பொங்கல் விழா கடந்த 74 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
தற்போது 75 ஆம் ஆண்டாக காவிரிப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கடங்களில் புனித நீர் நிரப்பி கடஸ்தாபனம் செய்து சிறப்பு யாகம் வளர்த்து மகா பூர்ணாஹுதியும், அதனையடுத்து மகா தீபாராதனையும் செய்து நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பட்டு காவிரி நதிக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட மங்கல பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
மேலும் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காவிரி அன்னைக்கு பஞ்சார்த்தி காண்பிக்கப்பட்டது. பின்னர், காவிரி நதியில் மாநகராட்சி துணை மேயர் தமிழழகன் மற்றும் அவரது மனைவி ஆனந்தி தமிழழகன் ஆகியோர் தீபத்தை மிதக்க விட்டனர். இந்நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்பட திரளானோர் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு காவிரி அன்னையை வணங்கி வழிபட்டனர்.