திருவையாறு அருகே மழையினால் 50 ஏக்கர் வாழை, 20 ஏக்கர் எள்ளு பயிர்கள் சேதம்; விவசாயிகள் வேதனை!! தஞ்சாவூர்: திருவையாறு அடுத்த நடுக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ரெங்கராஜன். இவர் வரகூர் கிராமத்தில் சுமார் ஆறு ஏக்கர் வாழை சாகுபடியும், சுமார் மூன்று ஏக்கரில் எள்ளு சாகுபடியும் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மாலை நேரங்களில் திருவையாறு சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக வாழையை மழைநீர் சூழ்ந்து வாழைக்கன்று அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மழை நீர் வடியாமல் வேர் அழுகும் நிலையும் உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வாய்க்கால், ஆறு, குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வரகூர் கோணகடுங்கால் ஆற்றில் தடுப்பணை கட்டப்படுவதற்காக வடிகால் வாய்க்கால்களை குழாய் வைத்து மூடாமல் மண்ணை கொண்டு மூடி உள்ளார்கள்.
வரகூர் பகுதியில் சுமார் 20 ஏக்கர் எள்ளு பயிர் சாகுபடியும், 50 ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளதால் மழை நீர் வடியாமல் இருப்பதால் வாழை தோப்பில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து உடனடியாக அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு மழை நீர் வடிவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.
மழை நீர் தொடர்ந்து வாழையை சூழ்ந்து இருந்தால் வாழை இலை விற்பனையும் பாதிப்பு ஏற்படும். பூவுடன் இருக்கும் வாழை மரங்கள் அனைத்தும் சாயக்கூடிய நிலை ஏற்பட்டு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை விவசாயிகளுக்கு ஏற்படுத்தும். எனவே தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: தஞ்சாவூரில் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் 'தாய்மை நூலகம்' திறப்பு - கர்ப்பிணிகள் வரவேற்பு!