தஞ்சாவூர்:கடந்த ஆண்டுகளில் தமிழ்நாடு காவல் துறையினால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, போதைப் பொருள்களை அழிக்கும் நிகழ்வு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்டம் செங்கிபட்டி அருகே அயோத்திபட்டியில் போதைப் பொருள்கள் இல்லா தமிழ்நாடு என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் திருச்சி, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை , மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் 227 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 4 ஆயிரத்து 192 கிலோ கஞ்சா இயந்திரத்தில் போட்டு அழிக்கப்பட்டது.
இது குறித்து திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் கூறும்போது, "கொலை, கொள்ளை சம்பவங்கள் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குறைவாகத்தான் உள்ளது. குற்றங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, அங்கு நவீன கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இதன் மூலம் குற்ற நடவடிக்கைகளை குறைக்கலாம். திருச்சி மத்திய மண்டலத்தில் 267 வழக்குகளில் 4ஆயிரத்து 192 கிலோ கஞ்சா பொருள்கள் அழிக்கப்பட்டது. முதலமைச்சரின் அறிவுரையை ஏற்று இந்தப் பணியை தொடர்ந்து செய்வோம்.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு தனிப்படை அமைத்ததால் தான் இந்த அளவிற்கு கஞ்சா பொருள்கள் பிடிபட்டுள்ளது. இலங்கைக்கு கடத்திச் செல்வதாக வந்த தகவலின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கையால் தான் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் மொத்தமாக கஞ்சா பொருள்கள் பிடிக்க முடிந்தது. வடமாநிலங்கள், ஆந்திராவில் இருந்தது தான் கஞ்சா வருகிறது. கடத்தல் தகவல் கிடைத்தவுடன் கடலோர காவல் படையினருடன் இணைந்து போதைப் பொருள்களை பறிமுதல் செய்கிறோம்” என தெரிவித்தார்.