தஞ்சாவூர்:பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று காலை முதல் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரத்தநாடு, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டமன்ற தொகுதியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி மையம், மாதிரி நூலகம் என பல்வேறு விதமான கட்டடங்கள் மற்றும் வசதிகளை திறந்து வைத்தார்.
இதன் ஒரு பகுதியாக, கும்பகோணம் தொகுதிக்குட்பட்ட நீரத்தநல்லூர் ஊராட்சி பகுதியில் ரூ.10,94,000 மதிப்பீட்டில் அமைந்துள்ள புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், அமைச்சர் அன்பில் மகேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உயர்கல்வியில், அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஓதுக்கீடு குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவியர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கல்லூரிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக அனைவருக்கும் மதிப்பெண் பட்டியல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 13,331 தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில், 25 மாவட்டங்களுக்குட்பட்ட சுமார் 11,000 ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு கிளியரன்ஸ் பெற்றுள்ளோம்.