தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அடுத்த கடற்கரை பகுதியான தம்பிக்கோட்டை, மறவக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.
புயல் எச்சரிக்கை காரணமாக மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் கடலோரக் குழுமப் போலீசாா் எச்சரிக்கை விடுத்த நிலையில், நாட்டுப் படகு மீனவா்கள் கடந்த இரு தினங்களாகக் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் இருந்துள்ளனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கடல், சீற்றத்துடனும், அதிவேகக் காற்றுடனும் காணப்பட்டு வந்துள்ளது.
ஆனால், நேற்று காலை திடீரென கடல் 200 மீட்டா் தூரம் உள்வாங்கியதால் மீனவா்கள் மற்றும் கடலோரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் பகுதி விசைப்படகுகள், அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி மற்றும் ரேஸ் மடி வலைகளைப் பயன்படுத்தி, மீன்பிடிப்பதாக நாட்டுப் படகு மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.