தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 8 வயதுடைய இரண்டு சிறுமிகள் இருவரும் தோழிகள் ஆவார்கள், இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகின்றனர், இவர்கள் பள்ளி முடிந்த பிறகு மாலை நேரத்தில் ஆற்றங்கரை ஓரத்தில் விளையாடச் செல்வது வழக்கம், கடந்த மார்ச் மாதம் அவர்கள் இருவரும் விளையாடச் சென்றுள்ளனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் (65) மற்றும் முருகன் (60) ஆகியோர் இந்த சிறுமிகளை அழைத்துப் பேசி அந்த சிறுமிகளுக்கு சாக்லேட் மற்றும் தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து இருவரும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சிறுமிகள் விளையாட வரும்போதெல்லாம் ஆற்றங்கரை ஓரத்தில், அந்த இரண்டு சிறுமிகளுக்குச் செல்வம் மற்றும் முருகன் இருவரும் மாறி மாறி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதுமட்டும் அல்லாமல் இதை வீட்டில் சொல்லக் கூடாது எனவும் அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி தருவதாகவும் அந்த சிறுமிகளை அவர்கள் மிரட்டியுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரண்டு சிறுமிகளும் ஆற்றங்கரையில் இருந்து தனியாக வருவதைப் பார்த்த பெண் ஒருவர் இந்த நேரத்தில் உங்களுக்கு இங்கே என்ன வேலை என்று சத்தம் போட்டு உள்ளார். இதனால் அந்த சிறுமிகள் அழுது கொண்டே வீட்டிற்கு வந்துள்ளனர்.
அவர்கள் அழுது கொண்டு வருவதைப் பார்த்த அவர்களது பெற்றோர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர், அப்போது இருவரும், ஆற்றங்கரைக்குச் சென்றதால் தங்களைப் பெண் ஒருவர் திட்டியதாகக் கூறியுள்ளனர். அதைக் கேட்ட அவர்களது பெற்றோர்கள் இதுகுறித்து அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பியபோது, செல்வம் மற்றும் முருகன் இருவரும் தங்களிடம் தவறாக நடந்ததை குறித்து அந்த சிறுமிகள் கூறியுள்ளனர்.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமிகளின் பெற்றோர்கள் இது குறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் அடிப்படையில், காவல் ஆய்வாளர் நாகலட்சுமி விசாரித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து செல்வம் மற்றும் முருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதன் பின்னர், அவர்களைத் தஞ்சை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி சுந்தர்ராஜன் விசாரித்து நேற்று (டிச 29) செல்வம் மற்றும் முருகன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்குப் பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:நெல்லையில் திருமண உதவித்தொகைக்கு லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை அலுவலர் கைது!