தஞ்சாவூர்: 108 வைணவ திவ்ய தேசங்களில் 21ஆவது திவ்ய தேசமாக போற்றப்படும் கும்பகோணம் அருகே உள்ள நாதன்கோயில் செண்பகவள்ளி தாயார் சமேத ஜெகந்நாதபெருமாள் திருக்கோயிலில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு உதயகருட சேவை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர். தொடர்ந்து உற்சவர் பெருமாள் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
நான்குனேரி ஸ்ரீ வானமாமலை ஜீயர் சுவாமிகள் திருமட நிர்வாகத்திற்குட்பட்ட இச்சிறப்பு பெற்ற நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகந்நாதப் பெருமாள் திருக்கோயிலில் மூலவர் சீனிவாசன் மேற்கு நோக்கி வைகுண்டத்தில் உள்ளது போன்று ஸ்ரீ தேவி, பூமிதேவி தாயாருடன் ஒரே ஆசனத்தில் அமர்ந்த திருக்கோலத்திலும், செண்பகவல்லி தாயார் கிழக்கு முகம் நோக்கி தனி சன்னதி கொண்டும் அருள்பாலிக்கின்றனர்.
ஜயவிஜயர்களால் அதிகார நந்திக்கு பாகவதாப சாரத்தினால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில் வழிபாடு செய்து தை அமாவாசை தினத்தில் சாபநிவர்த்தி கிடைத்த புண்ணிய சேஷத்திரம், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம், 108 திவ்ய தேசங்களில் 21வது தலமும், சோழ நாட்டு திருப்பதிகள் நாற்பதில் நடுநாயகமான தலமும் ஆகும்.