தஞ்சாவூர்:பட்டுக்கோட்டை அருகே ஆலடிக்குமுளையில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்புவரை 55 மாணவர்கள் படித்துவருகின்றனர். பள்ளியின் வளர்ச்சிக்கு மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் முன்னாள் மாணவர்கள், தலைமை ஆசிரியர் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
சேர்க்கையை அதிகரிக்க அறிவிப்பு
அந்தவகையில், நடப்புக் கல்வியாண்டில் புதிதாகச் சேரும் மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் 10 பேரும், தலைமையாசிரியரும் இணைந்து பல்வேறு சலுகைகளையும், பரிசுகளையும் வழங்க முடிவுசெய்தனர். அதன்படி,
- இந்தக் கல்வியாண்டில் சேரும் மாணவர்களின் பெயரில் அஞ்சலகத்தில் ஆயிரம் ரூபாய் வைப்புத்தொகை செலுத்தப்படும்,
- பெற்றோர்களை ஊக்கப்படுத்தும்விதமாக குலுக்கல் முறையில் 10 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும்
எனச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, சேர்க்கை தொடங்கிய சில நாள்களில் 14 மாணவர்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர். அவர்களின் பெயர்களில் அஞ்சலகத்தில் தொடங்கிய கணக்குப் புத்தகத்தை பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ஜான்பாக்கியம் செல்வம், தலைமையாசிரியர் சரவணன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
ரூ.1,000 வைப்புத்தொகை
இது தொடர்பாக நம்மிடம் பேசிய தலைமையாசிரியர் சரவணன், "தற்போது பலரும் தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்கின்றனர். அவர்களின் கவனத்தை அரசுப் பள்ளியின் பக்கம் திருப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் பள்ளியின் முன்னாள் மாணவர் வை. கோவிந்தராசு 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்தார்.
எனது பங்குக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கினேன். மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் எனப் பள்ளியில் புதிதாகச் சேரும் மாணவர்களின் பெயரில் அஞ்சல் கணக்கில் ஆயிரம் ரூபாய் வைப்புத்தொகை செலுத்தப்படும். மேலும், கற்றலுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
அத்துடன் புதிதாகச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோரை குலுக்கல் முறையில் தேர்வுசெய்து
- முதலிடம் பெறுவோருக்கு 10 ஆயிரம் ரூபாய்,
- இரண்டாவது இடம் பெறுவோருக்கு ஐந்தாயிரம் ரூபாய்,
- மூன்றாம் இடம் பெறுவோருக்கு இரண்டாயிரத்து 500 ரூபாய்
என ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. அதேபோல்,
- தொலை தூரத்திலிருந்து வரும் மாணவர்களுக்கு வாகன வசதி,
- 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்குச் சிறப்புப் பரிசு,
- 450 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கும் அனைத்து மாணவர்களுக்கும் 11ஆம் வகுப்பில் சேருவதற்கான கல்விச்செலவு
உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட உள்ளன" என்றார்.
இதையும் படிங்க:ஒரு பக்கம் பயிற்றுவித்தல், மறுபக்கம் சமூக சேவை - அரசுப்பள்ளி ஆசிரியையின் பிரத்யேக நேர்காணல்