தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்குள்பட்ட பாப்பான்குளம் அம்மன்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (20). இவர் வெல்டிங் வேலை செய்துவந்தார். நேற்று மதியம் (டிச. 24) வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர்கோயில் பின்புறம் ஒருவர் விஷம் குடித்து வாயிலிருந்து ரத்தம் வெளியே வந்த நிலையில் இன்று காலை இறந்து கிடந்துள்ளார். இதைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
உடற்கூராய்வு
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்துவந்து பார்த்தபோது இறந்துகிடப்பது ராஜ்குமார் என்பது தெரியவந்தது. பின்னர் காவல் துறையினர் இறந்த ராஜ்குமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விசாரணை
இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உமாதங்கம் (18) என்ற பெண்ணை ராஜ்குமார், காதல் திருமணம் செய்துகொண்டு சிறிய வீட்டில் தனது பெற்றோர், தம்பி, பாட்டி, மனைவியின் தாய் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்துவந்துள்ளார்.
மனக்குழப்பம்
இதனால், மனைவி நாம் தனியாக வீடு பார்த்து வாடகைக்கு இருப்போம் சில நாள்களாகவே கூறிவந்துள்ளார். அதற்கு, ராஜ்குமாரின் பாட்டி எங்கள் மகனை எங்களிடமிருந்து பிரிக்க வேண்டாம் எனக் கூறியதாகத் தெரிகிறது. இதனால், கடந்த 10 நாள்களாக யாருக்கு நாம் பரிந்து பேசுவது என்ற குழப்பத்தில் ராஜ்குமார் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மதியத்திற்கு மேல் வீட்டைவிட்டு வந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். காதல் திருமணம் முடிந்த மூன்று மாதத்தில் இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:செல்போனில் பேசியதை தந்தை கண்டித்ததால் சிறுமி தற்கொலை