தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

22 வயதில் பஞ்சாயத்து தலைவர் பதவி - என்ன செய்ய போகிறார் ஸாருகலா? - கடையம் ஊராட்சி

தமிழ்நாட்டில் இளம் பஞ்சாயத்து தலைவர்கள் பட்டியலில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஸாருகலா இடம்பெற்றுள்ளார். பொறியியல் பட்டதாரியான இவர், மக்களின் அத்தியாவசிய தேவையான தண்ணீர் பிரச்னையை தீர்த்து வைப்பேன் என உறுதியளித்துள்ளார்.

young graduated panchayat president, charukala from tenkasi kadayam, சாருகலா, ஸாருகலா, இளம் பஞ்சாயத்து தலைவர், young panchayat president, வெங்கடாம்பட்டி, கடையம் ஊராட்சி, தென்காசி
ஸாருகலா

By

Published : Oct 20, 2021, 5:16 PM IST

தென்காசி: கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக ஸாருகலா தனது 22ஆவது வயதில் பதவியேற்றுக்கொண்டார்.

அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை நாம் காண முடியும். வளர்ந்து வரும் தொழில்நுட்பம், அதனை சார்ந்திருக்கும் இளைஞர்களை வெளி உலகிற்கு எளிதில் எடுத்துச் செல்கிறது. அதுமட்டுமில்லாமல், செயல்படாத தலைமை குறித்த கருத்துகள் எளிதில் கசிந்துவிடுவதாலும், மக்கள் படித்த இளைஞர்களை நம்புவது அதிகரித்துள்ளது.

இளம் பட்டதாரி தலைவர்

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல படித்த இளைஞர்கள் வெற்றி பெற்றனர். அந்தவகையில் தென்காசி மாவட்ட கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து தலைவராக ஸாருகலா (22) பதவியேற்றுக்கொண்டார்.

லட்சுமியூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி சுப்பிரமணியன் என்பவரது மகளான ஸாருகலா, தனது பொறியியல் படிப்பை சென்ற ஆண்டு நிறைவு செய்துள்ளார். தொடர்ந்து முதுநிலை பொறியியல் படிப்பை பயின்றுவரும் கல்லூரி மாணவியாக உள்ளார்.

தேர்தல் சுவரொட்டி

தனது தந்தை ரவி சுப்பிரமணியன் பொதுமக்களுக்கு சேவை செய்வதை கண்டு அரசியலில் ஆர்வம் வந்ததாகக் குறிப்பிடும் இளம் தலைவர், மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் செய்து தருவேன் என உறுதியளித்துள்ளார்.

கட்சி சார்பில்லாமல் வெற்றி

2011ஆம் ஆண்டு நடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட ரவி, சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதனைத் தொடர்ந்து தன் மகளை களத்தில் இறக்கி வெற்றி கண்டுள்ளார்.

பூட்டுசாவி சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட ஸாரு, 3336 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ரேவதி முத்துவடிவு என்பவரை விட, 796 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தொடர்ந்து வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து தலைவராக பதவியேற்று கொண்ட ஸாருகலா, "சட்ட முறைப்படி நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையையும் பற்று உறுதியையும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநாட்டுவேன் என்றும், நான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நேர்த்தியாக நிறைவேற்றுவேன் என்றும் கடவுள் அறிய உறுதி கூறுகிறேன்" என்று உறுதிமொழி ஏற்றார்.

அடிப்படை தேவைகள்

பதவியேற்று தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்த ஸாரு, பொதுமக்களுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்க ஜல்ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், கழிவுநீர் ஓடைகள் ஒழுங்குபடுத்தப்படும் எனவும், எரியாமல் இருக்கும் தெரு விளக்குகள் உடனடியாக சரிசெய்யப்படும் எனவும் உறுதியளித்தார்.

பதவியேற்கும் ஸாருகலா

இதையடுத்து அவருக்கு ஊர் பொதுமக்களும், குடும்பத்தினரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதே மாவட்டத்தில் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தெற்குமேடு ஊராட்சி மன்ற தேர்தலில், அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள் அனு (21) கத்தரிக்காய் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கொலை செய்ய சொன்னால் கொன்றுவிடுவீர்களா...? - எஸ்.பியிடம் உயர் நீதிமன்றம் காட்டம்

ABOUT THE AUTHOR

...view details