தென்காசி மாவட்டத்தில் கரோனா வைரஸால் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒருபுறம் இருந்தாலும் கரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு தொழிலாளர்கள் வேலை இழந்து பரிதவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது கோடைக்காலம் பதநீர் சீசன் என்றாலும்கூட, கரோனா ஊரடங்கால் பதநீர், நுங்கு விற்பனை செய்ய முடியாமல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தைப் பொறுத்தவரை சுரண்டை பகுதியில் அதிக பனைமர தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் காலையில் எழுந்தவுடன் பனை மரத்தில் ஏறி பதநீர் எடுத்து அதை வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர். லிட்டர் அளவை பொறுத்து பதநீருக்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள்தான் அதிகளவில் நுங்குகளை வாங்கி செல்வார்கள். தற்போது ஊரடங்கு உத்தரவால் தெருக்களுக்கு சென்று பதநீர் நுங்குகளை விற்பனை செய்ய முடியாமல் தொழிலாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.